சென்னை: நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஊரடங்கு உத்தரவு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதற்கு முன்னதா மார்ச் மாதம் நடைபெற இருந்த பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. பல மாநிலங்களில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவ-மாணவிகள் தேர்ச்சி என அந்தந்த மாநில அரசுகள் அறிவிப்பை வெளியிட்டது. தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என அறிவித்தது.
அதேநேரத்தில் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 27 ஆம் தேதி முதல் நடைபெற இருந்தது. ஆனால் ஊரடங்கு உத்தரவு காரணமாக அது தள்ளி வைக்கப்பட்டது.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்பொழுது நடைபெறும் என பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
பிரதமர் மோடி அறிவித்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதன் பிறகு தேர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நாட்டில் பரவி வரும் கொரோனா தாக்கத்தை அடுத்து, மீண்டும் ஊரடங்கு உத்தரவை மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டார்.
இதனையடுத்து தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மீண்டும் ஒத்தி வைக்கப்படுவதாகவும், தேர்வு ரத்து செய்யப்படவில்லை எனவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு கட்டாயம் நடக்கும். அதற்கான அட்டவணை மற்றும் தேர்வு நடைபெறும் மையம் ஆகியவை ஊரடங்கு உத்தரவு முடிந்தவுடன் அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
மேலும் தமிழ் நாட்டில் ஊரடங்கு உத்த்ரவு விலக்கிக்கொள்ளப்பட்டதற்கு பின்னர் தான் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு, 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.