முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நாள் முதல் விறுவிறுப்பாக திமுக அரசு இயங்கி வருகிறது. பாராட்டுக்கள், விமர்சனங்கள் என கலந்துகட்டிய ஆட்சியில் திடமான எதிர்க்கட்சி அந்தஸ்தில் எண்ணிக்கை அடிப்படையில் அதிமுக இருந்து வருகிறது. ஆனால், பல்வேறு எதிர்க்கட்சிகள் தங்களைத் தான் தமிழகத்தின் எதிர்க்கட்சி என கூறிக் கொண்டு வருகின்றன. இந்த எதிர்கட்சி விவகாரம் தொடர்பாக பல்வேறு இடங்களில் பல்வேறு எதிர்கட்சித் தலைவர்கள் பேசியவற்றைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.!
அண்ணாமலை - பாஜக மாநிலத் தலைவர்
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய போது, ''எதிர்க்கட்சி அந்தஸ்து என்பது மக்கள் அளிக்கும் வாக்குகள் மூலம் கிடைக்கிறது. 2021 சட்டப்பேரவை தேர்தல் முடிவில் அதிமுகவுக்கு மக்கள் எதிர்கட்சி அந்தஸ்து அளித்துள்ளனர். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதிமுகவுடனோ, மற்றொரு கட்சியுடனோ எதிர்கட்சிக்கு போட்டிபோடும் மனப்பான்மை பாஜவுக்கு இல்லை. பாஜக தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆளும்கட்சியாக வருவதற்கும், மக்கள் மனதை வெல்வதற்கும் என்ன செய்ய வேண்டுமோ அதை பாஜக செய்து வருகிறது.
மேலும் படிக்க | பாஜகவில் பதவி பெற பல லட்ச ரூபாய் பேரம்: குமுறும் பெண் நிர்வாகி!
மேலும், திமுக அரசு பேசும் அனைத்து விஷயங்களும் பாஜகவுக்கு எதிராக உள்ளது. கருத்தியல் அடிப்படையில் தமிழக அரசியல் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் மக்கள் இரு பக்கங்களை முடிவு செய்கின்றனர். நீட் தேர்வு, தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விஷயங்களில் தமிழகத்தில் முக்கிய கட்சிகள் ஒருபக்கம் உள்ளன. பாஜக மட்டும்தான் எதிர்பக்கம் உள்ளது. அதிமுகவுடன் ஒப்பிடுவதற்கோ, சண்டையிடுவதற்கோ இதை நாங்கள் செல்லவில்லை. கருத்தியல் அடிப்படையில் பாஜகதான் எதிர்க்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது"
பொன்னையன் - அதிமுக மூத்த தலைவர்
சமீபத்தில் நடந்த கூட்டமொன்றில் பேசிய அதிமுக மூத்த தலைவர் பொன்னையன், “பாஜக நட்பு கட்சி தான் என்றாலும், அதிமுகவின் கொள்கையோடு அக்கட்சி ஒத்துபோவதில்லை. தமிழகத்தின் உரிமைக்காக பாஜக போராடவில்லை என்பது நாடறிந்த உண்மை. பாஜக தனது கொள்கையை மாற்றி கொள்ளாத வரை தமிழகத்தில் அக்கட்சியால் வளர முடியாது. மாநிலம் சார்ந்த பிரச்னைகளான காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு விவகாரங்களில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது. எச்சரிகையுடன் அதனை சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்கும் விழிப்புணர்வு பணியை அதிமுக மேற்கொள்ள வேண்டும்”
ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பிரதான எதிர்க்கட்சியாக விளங்குவது அதிமுக மட்டுமே. கடந்த ஓராண்டு காலமாக சிறந்த எதிர்க்கட்சியாக சட்டமன்றத்திலும், சட்டமன்றத்திற்கு வெளியிலேயும் இயங்கிக் கொண்டிருக்கும் இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் மக்கள் இயக்கம். உண்மை நிலை இவ்வாறிருக்க, எதிர்க்கட்சி செயல்பாடுகளில் அனைத்திந்திய அதிமுக பின்தங்கி இருப்பது போன்ற மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டு, சமீப காலமாக அதுகுறித்த விவாதங்கள் ஊடகங்களில் நடைபெற்று வருகின்றன. இந்தத் தருணத்தில் அதிமுக, சட்டமன்றத்திற்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி, மிகச் சிறந்த எதிர்க்கட்சியாக, பிராதன எதிர்க்கட்சியாக, மக்களின் குறைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அவற்றிற்கு தீர்வு காணும் மாபெரும் மக்கள் இயக்கமாக செயல்படுகிறது என்பதை சில முக்கிய எடுத்துக்காட்டுக்களுடன் சுட்டிக்காட்ட நான் கடமைப்பட்டிருக்கிறேன்’ என்று சில போராட்டங்களை பட்டியலிட்டார்.
அன்புமணி - பாமக தலைவர்
திருச்சி வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சட்டப்பேரவையில் அதிமுக எண்ணிக்கை அடிப்படையில்தான் எதிர்க்கட்சியாக உள்ளது. ஆனால், மக்களுக்கு என்ன தேவை என்பதை பேசியும் அதை நிறைவேற்றவும் வைப்பது எதிர்கட்சியின் வெற்றியாக உள்ளது. அந்த வகையில் நாங்கள்தான் உண்மையான எதிர்க்கட்சி. இதை திரும்ப திரும்ப கூறுவதில் எங்களுக்கே கூச்சமாக உள்ளது.!’
மேலும் படிக்க | திமுகவின் ஊழலை பற்றி கேட்கும் அண்ணாமலை அதிமுகவின் ஊழலை பேசாதது ஏன்? - சீமான் கேள்வி
பிரேமலதா விஜயகாந்த் - தேமுதி பொருளாளர்
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா பேசியதாவது, ‘அதிமுக செய்த தவறுகளால்தான் இன்று அவர்கள் ஆட்சியை இழந்து வருந்துகிறார்கள். நாங்கள் சொன்னதை அவர்கள் சரியான நேரத்தில் செய்திருந்தால் ஆட்சியில் இருந்திருப்பார்கள். தமிழகத்தில் நடந்த அனைத்து பிரச்சினைக்கும் முதல் குரலாக தேமுதிக கொடுத்து வருகிறது. மக்களுக்காக எங்களுடைய குரலை தைரியமாக கொடுத்திருக்கிறோம். ஆகவே, தமிழ்நாட்டில் தேமுதிகதான் எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது.’
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR