மாதர் சங்கத்தின் முயற்சிக்கு பாராட்டு; 400 கிமீ நடைபயணம் வெற்றி பெற வாழ்த்து: CPIM

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் வன்முறை மற்றும் போதைக்கு எதிராக 400 கி.மீ. நடைபயணத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெற்றி பெற வாழ்த்து.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 25, 2019, 03:21 PM IST
மாதர் சங்கத்தின் முயற்சிக்கு பாராட்டு; 400 கிமீ நடைபயணம் வெற்றி பெற வாழ்த்து: CPIM title=

சென்னை: பெண்கள் மீதான வன்முறைகளுக்கு முடிவு கட்டவும், போதை கலாச்சாரத்தைத் தடுத்து நிறுத்தவும் வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சுமார் 400 கி.மீ. நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நடைபயணம் இன்று முதல் (நவம்பார் 25) முதல் டிசம்பர் 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நடைபயணம் இரண்டு குழுக்கள் மூலமாக நடத்தப்படுகிறது. முதல் குழு இன்று காலை 9.00 மணிக்கு கடலூர் மாவட்டத்தில் இருந்து துவங்கி உள்ளது. இரண்டாவது குழு இன்று காலை 9.00 மணிக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து துவங்கி உள்ளது.

இதுக்குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, 

பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை மற்றும் போதைப் பழக்கத்தை எதிர்த்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ் மாநிலக்குழு சார்பில் வடலூர், திருவண்ணாமலை ஆகிய இரு முனைகளில் இருந்து சென்னை நோக்கி நாளை (நவம்பர் 25 அன்று) துவங்கவுள்ள 400 கி.மீ நடைபயணத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வாழ்த்துகிறது.

இந்தியா முழுதும் குறிப்பாக தமிழகத்திலும் புதுவையிலும் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள் அனுதினமும் அதிகரித்து வருகின்றன. அரசியல், ஆன்மிகம், அதிகாரத் தட்டு, நீதித்துறை ஆகியவற்றின் உயர்மட்டங்களில் உள்ளவர்கள் பலர் மீதும் குற்றச்சாட்டுக்கள் அண்மைக் காலங்களில் எழுந்திருப்பது அதிர்ச்சி அளிப்பவை ஆகும். மீடூ இயக்கம் பல்வேறு துறைகளில் உள்ள பாலின அநீதிகளை, காலம் காலமாய் புதைந்து கொண்ட குமுறல்களை வெளிக் கொணர்ந்ததைக் காண முடிந்தது.

சமூக வலைத்தளங்களில் தொடுக்கப்படும் உளவியல் ரீதியான தாக்குதல்கள் பெண்களின் சுயத்தை, மதிப்பை குறிவைக்கின்றன. குறிப்பாக பெண் சமூக செயல்பாட்டாளர்கள் கேவலமான முறையில் மிரட்டப்படுகின்றனர்.

பணித்தளங்களில் பாலின வன்முறைகளும் அதிகரித்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன. இங்கெல்லாம் கூட உச்சநீதிமன்ற வழிகாட்டல்களின் படி பாலின வன்முறை தடுப்பு குழுக்கள் அமைக்கப்படாததும், செயல்படாமையும் அதிர்ச்சி தரும் உண்மைகளாகும்.

தமிழகத்தில் அருப்புக் கோட்டை கல்லூரி, பொள்ளாச்சி சம்பவம் சாதி ஆணவக் கொலைகள், வன்துரத்தல்கள் உள்ளிட்ட நிகழ்வுகள் ஓர் வலுவான எதிர் வினைகளின் தேவையை உணர்த்துபவை ஆகும். புதுச்சேரியிலும் இத்தகைய பாலின வன்முறைகள் பரவலாய் நடந்தேறுவதை காண முடிகிறது.

போதை கலாச்சாரம் குடும்ப அமைப்பில், பெண் வாழ்வில் ஏற்படுத்துகிற இன்னல்கள் சொல்லில் அடங்காது. குறிப்பாக அடித்தளக் குடும்பங்களில் இது குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதிக்கிறது.

இவ்வளவு அநீதிகள், கொடூரங்கள், இன்னல்கள் பெண்களை, குழந்தைகளை பாதிக்கிற நிலைமையிலும் ஆட்சியாளர்கள் வாளாவிருப்பது கண்டனத்திற்குரியது. பாதிக்கப்பட்டோர் நீதிக்காக முனையும்போது அதிகார வர்க்கமும் காவல் துறையும் காட்டுகிற அலட்சியமும், பாரபட்சமும், அரசியல் தலையீடுகளுக்கு அடிபணிவதும் தமிழகத்தின் அனுபவங்கள். பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குண்டர்சட்ட பிரயோகம் ரத்து செய்யப்பட்டது ஓர் உதாரணம்.

இத்தகைய பின்புலத்தில் ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ் மாநிலக் குழு மேற்கொள்கிற நடை பயணம் குறிப்பிடத்தக்க முன் முயற்சி ஆகும். பல நூறுறு பெண்கள் 400 கிலோ மீட்டர் நெடும்பயணம் மேற்கொள்வது நெடிய வரலாற்றில் முதல் நிகழ்வு என்றால் மிகையாகாது.

இப்பயணம் கருத்தியல் தளத்திலும், களத்திலும் பாலின நீதி குறித்த விழிப்பை, நம்பிக்கையை, தீர்வுகளை ஏற்படுத்த உதவுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கருதுகிறது. ஜனநாயக மாதர் சங்கத்தின் முன்முயற்சியை பாராட்டுகிறது. 400 கி.மீ நடைபயணம் வெற்றி பெற உளமார வாழ்த்துகிறது.

இயற்கை இடர்பாடுகளுக்கிடையில், ஜனநாயக மாதர் சங்க தோழியர்கள் நடத்தும் நடைபயணம் வெற்றி பெற ஆதரவளிப்பது ஜனநாயக எண்ணம் கொண்ட அனைவரது கடமையாகும்.

இப்பயணத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழுமையான ஆதரவளித்து துணை நிற்பதுடன் அனைத்துப் பகுதி மக்களும் பேராதரவு அளித்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் கூறப்பட்டு உள்ளது.

Trending News