#GoBackModi இந்த ஹேஷ்டேக்தான் கடந்த அதிமுக ஆட்சியில் பிரதமர் மோடி வருகையின்போது திமுகவினரின் வேதவாக்கு. மோடி எப்போதெல்லாம் தமிழ்நாடு வருகிறாரோ அப்போதெல்லாம் கருப்பு கொடி காட்டுவது, கருப்பு பலூனை பறக்கவிடுவது, ட்விட்டரில் மேற்கூறிய ஹேஷ் டேக்கை ட்ரெண்டாக்குவது என திமுகவினர் தீவிரமாக களமாடினர்.
காலங்கள் மாறி திமுக ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஆனால் அதே காட்சிதான் தற்போது இருக்கிறதா என்றால் அது இல்லை. அப்படி இருக்க வேண்டுமென்பது அனைவரது விருப்பமும் இல்லை. ஆனால் எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடும், ஆளுங்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடும் எடுத்திருக்கிறது என திமுக தற்போது பெயர் வாங்கியிருக்கிறது.
இன்று காலைவரை கடந்த ஆட்சியில் களமாடிய திமுக நெட்டிசன்கள் பெரும்பாலும் வெளியில் தலைகாட்டவில்லை. ஆனால் இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் தலையெடுக்க #GoBackModi ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கினர். அதேசமயம் சென்னை முழுவதும் பாஜகவினரும் காவி கொடியை உயர பறக்கவிட்டு, பேனர்கள் வைத்து வேறு மாதிரி கொண்டாடிவருகின்றனர்.
அதுமட்டுமின்றி மோடியின் கடந்த கால தமிழக வருகையின்போது திமுகவினர் சார்பில் பறக்கவிடப்பட்ட கருப்பு பலூனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக காவி பலூனை பாஜகவினர் பறக்கவிட்டிருக்கின்றனர்.
இது கட்சி ரீதியான கொண்டாட்டமாக இருந்தாலும் இதுவரை தமிழகத்தில் இவ்வளவு உயரம் பறக்காத காவி கொடியையும், உயர பறந்தாலும் விமர்சித்த திமுகவினர் தற்போது காக்கும் மௌனத்தையும் பார்த்தால் ஒருவேளை பாஜகவுடன் புதிய மறைமுக நட்பு தோன்றியிருக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக கருத்து ஒன்று எழுந்திருக்கிறது.
ஒரு பிரதமர் மக்கள் சார்ந்த பணிகளை தொடங்கிவைக்க வரும்போது சித்தாந்த ரீதியிலான மோதல் தேவைதானா என்ற கேள்வி எழுந்தாலும், இதற்கு விதை போட்டது என்னமோ திமுகதான் என்பது நிதர்சனம்.
தமிழ்நாடு அரசாக மோடியை வரவேற்பது ஒரு மாநிலத்தின் கடமை என திமுகவின் ஒருதரப்பினர் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். அப்படி பார்க்கையில் கடந்த ஆட்சியில் அதிமுக தலைமையிலான அரசு பிரதமரை வரவேற்றதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அப்போது ஏன் விமர்சனம் இப்போது ஏன் கம்பளம் என்ற பேச்சும் சமூக வலைதளங்களில் எழுந்திருக்கிறது.
சமீபகாலமாகவே திமுக தலைமையிலான அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் முரணாகவே இருக்கின்றன என்ற பிம்பம் உருவாகியிருக்கிறது. ஆம்பூரில் மாட்டிறைச்சி பிரியாணிக்கு தடை, விக்னேஷ் லாக் அப் டெத், பல்லக்கு தூக்க முதலில் தடை பிறகு அதை விலக்கிக்கொண்டது, திராவிட கொள்கை என்று பேசி டெல்லியுடன் அளவான நட்பில் இருந்த கருணாநிதியின் உருவ சிலையை திறக்க வெங்கையா நாயுடுவை அழைத்தது என அந்தப் பட்டியலில் தற்போது மோடியுடனான புதிய நட்பும் இணைந்திருப்பதாக பலர் கூறுகின்றனர்.
மேலும் படிக்க | மாட்டுக்கறிக்கு தடை... திராவிட ஆட்சியா? சங்பரிவார் ஆட்சியா?
மேலும், சமீபத்தில் காவல் துறையினர் தங்களது கைகளில் குடையை வைத்துக்கொண்டு நிற்பது போன்ற புகைப்படம் வைரலானது. திராவிட மாடல் 2.0 என்ற வாதத்தின் அடிப்படையில் ஆட்சி நடக்கும் மாநிலம் ஒன்றின் காவல் துறையினர் கையில் காவி நிற குடையா என பலர் கேள்வி எழுப்பி; ஒருவேளை பாஜகவுக்கு திமுக தலைமையிலான அரசு காவி குடை பிடிக்கிறதோ என்ற கேள்வியையும் திமுகவின் எதிர் நிலையில் இருப்பவர்கள் எழுப்பினார்கள்.
அதேபோல், பிரதமர் மோடியை வரவேற்க வைக்கப்பட்டிருக்கும் கொடி கம்பங்களில் பாஜக கொடிக்கு அருகிலேயே திமுகவின் கொடி இடம் பிடித்திருந்ததையும் பலர் கவனித்து கடுமையான விமர்சனத்தை வைத்துவருகின்றனர்.
மேலும் படிக்க | எங்களையும் விடுதலை செய்யுங்கள்...முதலமைச்சருக்கு ரவிச்சந்திரன் கடிதம்
எது எப்படியோ மோடியை வரவேற்பது தமிழ்நாடு அரசு என்ற முறையில்தான் என திமுக விசுவாசிகள் கூற, இல்லை இல்லை மோதல் போக்கை கைவிட்டு டெல்லியுடன் திமுக சமாதான உடன்படிக்கை செய்துகொண்டது என எதிர்க்கட்சி விசுவாசிகள் கூறுகின்றனர்.
ஆகமொத்தம் மோடியின் இந்த வருகை பாஜகவுக்கு திமுக காவி கொடி பிடிக்க ஆரம்பித்திருக்கிறதோ என்ற கேள்வியையும் தமிழ்நாட்டில் எழுப்பியிருக்கிறது. அனைத்துக்கும் காலம்தான் விடை சொல்லும்...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR