பிரதமர் மோடி போல நாடு நாடாக சுற்றும் தமிழக அமைச்சர்கள்: ஸ்டாலின் தாக்கு

சீர்திருத்தத் திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ஆளும் அதிமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் சுட்டிக்காட்டுகின்றேன் எனவும் கூறினார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 12, 2019, 07:26 PM IST
பிரதமர் மோடி போல நாடு நாடாக சுற்றும் தமிழக அமைச்சர்கள்: ஸ்டாலின் தாக்கு title=

சீர்திருத்தத் திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ஆளும் அதிமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் சுட்டிக்காட்டுகின்றேன் எனவும் கூறினார். 

அவர் பேசியது, 

இன்றைக்கு இருக்கும் சூழ்நிலை உங்களுக்கு நன்றாகத் தெரியும். முதலமைச்சர் மட்டும் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றுவரவில்லை, முதலமைச்சரோடு சேர்த்து 10 அமைச்சர்கள் சென்றிருந்தார்கள். இன்னும், ஏழெட்டு பேர் உடன் போவதாக செய்திகள் வந்திருக்கிறது.

நீங்கள் அறிவித்ததில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து போட்டதில், எவ்வளவு ஒப்பந்தங்கள் முடிவாகியிருக்கின்றது. அப்படி முடிவானதில், எத்தனை நிறுவனங்கள் வந்திருக்கின்றது? எத்தனை தொழிற்சாலைகள் துவங்கப்பட்டிருக்கின்றது? அதன் மூலம் எத்தனை, பேருக்கு வேலை கிடைத்திருக்கின்றது? இதை அரசு வெளியிட வேண்டும் இதைத்தான் வெள்ளை அறிக்கை என்று சொல்கின்றோம்.

இதனை வெளியிடுங்கள் என்று சொன்னால், மந்திரிகள் அனைவரும் என்ன சொல்கின்றார்கள் என்றால், “வெள்ளை அறிக்கையும் கிடையாது, வெள்ளரிக்காயும் கிடையாது” என்று சொல்கின்றார்கள். நாங்கள் எதற்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்? நீங்கள் ஆட்சியில் இருந்த போது வெள்ளை அறிக்கை வெளியிட்டீர்களா என்று அமைச்சர் ஜெயக்குமார் நேற்று பேசியிருக்கின்றார். அதையும் நான் பத்திரிகைகளில் படித்தேன்.

நாங்களும் வெளிநாட்டிற்கு சென்றோம். முதலமைச்சர் செல்லவில்லை, துணை முதலமைச்சராக, உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த, நான் சென்றேன். நான் முதலீட்டை பெறுவதற்காக செல்லவில்லை, நீங்கள் நன்றாக கவனிக்க வேண்டும். இப்போது, உள்ளவர்கள் முதலீட்டை பெறுவதற்காக சென்றிருக்கின்றோம் என்று அறிவித்துவிட்டு சென்றிருக்கின்றார்கள். 

ஆனால், நாங்கள் சென்றது முதலீட்டை பெறுவதற்காக அல்ல இன்றைக்கு சென்னையை சுற்றி கம்பீரமாக ஓடிக்கொண்டிருக்கின்றதே மெட்ரோ ரயில் அதற்காக, ஜப்பான் நாட்டிற்கு சில அதிகாரிகளை மட்டும் அழைத்துச் சென்றேன். ஆனால், நீங்கள் சுற்றுலாத் துறை அமைச்சர்கள் போன்று கிளம்பி சென்றுக் கொண்டிருக்கிறீர்கள். 

எனவே, இன்னும் ஒன்றரை வருடம் தான் இருக்கின்றது. அதற்குள் எல்லா நாட்டிற்கும் சென்று வந்துவிட வேண்டும் என்று ஒரே முடிவோடு, பிரதமர் மோடி எப்படி ஊர் ஊராக, நாடு நாடாக சுற்றிக் கொண்டிருக்கின்றாரோ அதேபோல், இந்த ஆட்சிக் காலம் முடிவதற்குள் சுற்றி முடித்திடவேண்டும் என்று ஒரே கொள்கையோடு நீங்கள் சென்று போயிருக்கின்றீர்கள். அப்படி செல்லும் போது, சொந்த வேலையாக செல்கின்றோம் என்று அறிவித்துவிட்டு செல்லுங்கள். அதைவிடுத்து, முதலீட்டைப் பெறுவதற்காக செல்கின்றோம் என்று ஒரு நாடகத்தை நடத்திவிட்டு செல்கின்றீர்களே? என்ன முதலீடு என்று அறிவியுங்கள்?

அன்றைக்கு நாங்கள் ஜப்பான் நாட்டிற்கு செல்கின்றோம் என்றால், மெட்ரோ ரயில் திட்டத்திற்காக, இராமநாதபுரம் கூட்டுக்குடி நீர் திட்டத்திற்காக, அதேபோல் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற, அதற்குரிய நிதியைப் பெற நாங்கள் சென்றோம். அதை பெற்று வந்தும் தந்திருக்கின்றோம். வேறொன்றும் நாங்கள் கேட்கவிரும்பவில்லை. முதலீட்டை எந்தளவிற்கு பெற்றீர்கள் என்பதைப் பற்றி வெள்ளையறிக்கை வெளியிடுங்கள், வெள்ளையறிக்கை வெளியிடுங்கள் என்று தொடர்ந்து நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

நேற்றைய முன் தினம் சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பில் ஆர்.டி.ஐ என்று சொல்லும் தகவல் உரிமை பெறும் சட்டத்தின் கீழ் அதனை அடிப்படையாக வைத்து செய்தியைக் கேட்ட போது. தகவல் உரிமை சட்டத்தின் பேரில் அவர்களுக்கு கிடைத்திருக்கக்கூடிய ஆதாரப்பூர்வமான செய்தி என்னவென்று கேட்டீர்கள் என்றால், அம்மையார் ஜெயலலிதா அவர்கள் உயிரோடு இருந்த நேரத்தில் 2.42 இலட்சம் கோடி ரூபாய் முதலீட்டைப் பெற்று வேலை வாய்ப்பினை கொடுப்போம் என்று சொல்லியிருக்கின்றார்களே அது என்ன ஆனது என்று விளக்கம் கேட்டிருக்கின்றார்கள்.

அதற்காக கொடுக்கப்பட்ட விளக்கம் என்னவென்று கேட்டால் 14,000 கோடி ரூபாய்க்குத் தான் முதலீடு வந்திருக்கின்றது என்று மிகத் தெளிவாக விளக்கம் தரப்பட்டிருக்கின்றது. இது, நேற்று மாலையிலும் இன்றைக்கு காலையில் எல்லாப் பத்திரிகைகளிலும் செய்தியாக வந்திருக்கின்றது.

எடப்பாடி பழனிசாமி அவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப்போகின்றார்?

எனவே, இவற்றையெல்லாம் மூடிமறைக்க வேண்டும் என்ற நிலையில் தான் போய்க் கொண்டிருக்கின்றதே தவிர வேறல்ல, எனவே, நாட்டை குட்டிச் சுவராக்கக்கூடிய சூழ்நிலை இருந்து கொண்டிருக்கின்றது. எனவே, நான் மீண்டும் இங்கு உங்கள் எல்லோரையும் கேட்டுக்கொள்ள விரும்புவது. வரப்போகும் நல்லாட்சியை தமிழகத்தில் உருவாக்கித் தருவதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். அப்படி தயாராகக்கூடிய ஒரு நிலை விரைவில் ஏற்பட்டிருக்கின்றது.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நேரத்தில் என்ன கொண்டு வந்தீர்கள்? - என்ன கொண்டுவந்தீர்கள்? என்று கேட்டுக் கொண்டிருக்கின்றீர்களே, அம்பத்தூரில் இருந்து, திருபெரும்புதூர் வரையில் செல்லுங்கள். போகின்ற வழியில் எல்லாம் தொழிற்சாலைகள் இருக்கின்றதா இல்லையா? என்று பாருங்கள் இது வந்ததற்கு காரணம் தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சி.

தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டு அதனைக் கொண்டு வரவில்லை, அமைச்சர்கள் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் நடத்தி அதனைப் பெற்று வரவில்லை, தமிழ் நாட்டின் கட்டமைப்பைப் பார்த்து கலைஞர் அவர்களின் ஆட்சியைப் பார்த்து அவர்களே, வெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டினை நாடி வந்து தொழிற்சாலைகளை அமைத்திருக்கின்றார்கள்.

எல்லாவற்றையும் விட முக்கியகாரணம் தி.மு.க ஆட்சியில் கலெக்சன், கமிசன், கரெப்சன் கிடையாது. ஆனால், இன்றைக்கு உங்கள் ஆட்சியில் கலெக்சன், கமிசன், கரெப்சன் தான் நடந்து கொண்டிருக்கின்றது. அதனால், தான் முதலீட்டு ஒப்பந்தம் போட்டாலும், உலக முதலீட்டாளர் மாநாடு என்ற நாடகத்தை நடத்திக் கொண்டிருந்தாலும் அதெல்லாம் வெறும் வெட்டி வேசமாகத்தான் இருக்கின்றது.

மக்களை ஏமாற்றுவதற்காக நடத்துகின்ற நாடகங்களே தவிர வேறல்ல, இதனை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் நான் இவற்றையெல்லாம் வலியுறுத்தி சுட்டிக்காட்டுகின்றேனே தவிர வேறல்ல.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Trending News