அத்தியாவசியப் பொருட்களின் விலையிலும், விநியோகத்திலும் அலட்சியம் காட்டினால், மக்களிடம் இருந்து வெகு தூரம் அந்நியப்பட்டுப் போய் விடுவீர்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளும் அரசிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., வெங்காயத்தை உரிக்கும்போதுதான் முன்பெல்லாம் கண்ணீர் வரும். இப்போது வெங்காயம் விற்கும் அநியாய விலையை நினைத்துப் பார்த்தாலே கண்ணீர் வருகிறது.
தங்கம், வெள்ளி, டீசல், பெட்ரோல் போல, வெங்காயமும் இன்று கிடுகிடு விலையை வேகமாக எட்டிப் பிடிக்கும் பொருள்களுள் ஒன்றாக ஆகிவிட்டது அல்லது ஆக்கப்பட்டு விட்டது. இன்றைய விலை நிலவரத்தில் தங்கம், வெள்ளி, டீசல், பெட்ரோலுக்கு அடுத்து வெங்காயத்தையும் ஊடகங்கள் வெளியிடுகின்றன. முட்டை ஆம்லெட்டில் வெங்காயத்தை விலக்கிவிட்டு, முட்டைக்கோஸ் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன கடைகள். வெங்காயம் பயன்படுத்துவதால் பிரியாணி விலை கூடிவிட்டது.
கடலூரில் இரண்டு நாட்களுக்கு முன்னால் நடந்த ஒரு திருமணத்தில், மணமக்களுக்கு வெங்காயத்தை பரிசுப் பொருளாகக் கொடுத்து வாழ்த்திச் சென்றுள்ளார்கள். ஆட்டோவில் ஏறிய ஒருவர், பணத்துக்குப் பதிலாக வெங்காயம் கொடுத்ததாக 'வாட்ஸ்அப்பில்' தகவல் வருகிறது. வைர நகைகள் மாதிரி, வெங்காயத்தில் நகை செய்வதாக ஒரு விளம்பரம் பார்த்தேன். 'வெங்காயம் வாங்குற அளவுக்கு நீங்க பணக்காரங்களா?' என்கிறது ஒரு 'மீம்ஸ்'. இப்படி வானத்தைத் தொட்டுவிட்டது, வெங்காயத்தின் விலை!
இவை நாட்டில் நடக்கும் நகைச்சுவைக் காட்சிகள் அல்ல; நாம் கண்ணெதிரே அன்றாடம் காணும் எதார்த்தமான நிகழ்வுகளாக, உண்மைக் காட்சிகளாக இருக்கின்றன!
மக்கள் தினமும் உண்ணும் உணவில் அவசியம் தவறாமல் பயன்படுத்தும் காய்கறிகளில் மிக மிக முக்கியமானது வெங்காயம். அந்த வெங்காயத்தின் விலை, இன்று வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. வெங்காயம், ஏழை - எளிய - நடுத்தர மக்களுக்கு எட்டாத அபூர்வமான பொருளாகி விட்டது.
கடந்த நவம்பர் முதல் வாரம், ஒரு கிலோ வெங்காயம் 60 ரூபாய்க்கு விற்பனையானது. நவம்பர் 2-வது வாரம் 10 ரூபாய் உயர்ந்து, கிலோ 70 ரூபாய்க்கு விற்கப்பட்டது. டிசம்பர் 2-ஆம் தேதி ரூ.110-ஆக உயர்ந்தது. டிசம்பர் இரண்டாவது வாரம் ரூ.140-ஆக உயர்ந்தது. அதன்பிறகு நித்தமும் உயர்ந்து 200 ரூபாய் ஆகிவிட்டது! வெளிச்சந்தை விலைகளைச் சொல்லவே முடியாது. 230 ரூபாய் முதல் 250 வரை ஆகிவிட்டது.
வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்கள் வழக்கத்தை விட மிகக் குறைந்த அளவே வெங்காயம் வாங்கிச் செல்கின்றனர்; பெரும்பாலானோர் வாங்குவதையே நிறுத்திவிட்டார்கள். இந்த விலை உயர்வு ஒரே நாளில் நடந்துவிடவில்லை. தினந்தோறும் உயர்ந்து உயர்ந்து, இன்றைக்கு இவ்வளவு அதிக விலையில் வந்து நங்கூரம் போட்டு நிற்கிறது.
இந்த விலை உயர்வு குறித்து தமிழக அரசு சிறிதேனும் கவலை கொண்டதா? அதனைக் குறைப்பதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுத்ததா? என வெளியில் தெரியவில்லை!
'இதெல்லாம் நம்முடைய வேலையா?' என்ற அலட்சியத்தில் ஆட்சி நடத்துகிறார்களா?
வெங்காயத்தின் விலை சில மாதங்களாகவே உயர்ந்து வருகிறது. இதற்கு மிக முக்கியமான காரணமாக, மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்த மழை என்று சொல்லப்படுகிறது. நாசிக்கில் இருக்கும் வெங்காயக் கொள்முதல் சந்தையில் இருந்துதான் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் வெங்காயம் அனுப்பி வைக்கப்படுகிறது. அதிக மழை காரணமாக அங்கு உற்பத்தியும் பாதிக்கப்பட்டது; கொண்டு வரும் பணிகளிலும் முடக்கம் ஏற்பட்டது. எனவே சென்னைக்கு வரும் வெங்காயத்தின் அளவு பாதியாகக் குறைந்தது. இதுதான் இந்த விலை உயர்வுக்குக் காரணம்.
இது ஏதோ தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏற்பட்ட பிரச்சினை அல்ல; மற்ற மாநிலங்களுக்கும் இதே நெருக்கடிதான் என்று முதலமைச்சர் பேட்டி கொடுத்திருக்கிறார். ஆனால், மற்ற மாநிலங்கள் இந்த நெருக்கடியைப் பெருமளவுக்குச் சமாளித்துவிட்டன. தமிழகம் வழக்கம்போல, எல்லாவற்றையும் போல, போதிய அளவு வெங்காயம் விநியோகத்திற்குச் செல்வதிலும், வெங்காய விலையை மக்களின் தாங்கும் சக்திக்கேற்ப கட்டுப்படுத்துவதிலும் மிகவும் பின்தங்கி விட்டது.
இந்தியா முழுவதும் வெங்காயம் அதிக விலைக்கு விற்றாலும், மேற்கு வங்கம், ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் விலை கட்டுக்குள் இருக்கிறது.
வெங்காயம் கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்பட, அந்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. இதனை ஏன் தமிழக அரசால் செய்ய முடியவில்லை?
நாடு முழுவதும் தினமும் ஏராளமான விருதுகளை வாங்கி வருவதாகச் சுய தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அ.தி.மு.க. அரசால், உலகம் முழுவதும் சென்று பல்வேறு பட்டங்களைப் பெற்றுவரும் முதலமைச்சர், துணை முதலமைச்சரால், இந்த நடவடிக்கைகளில் ஏன் இறங்க முடியவில்லை? - என்பதுதான் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ள கேள்வியாகும்.
வெங்காயத்தை அதிக விலை கொடுத்து சில்லறை வணிகர்களால் வாங்க முடியவில்லை, அதிக மழை காரணமாக எடுத்துவர முடியவில்லை, இடைத்தரகர்கள் பதுக்குவது - என்பது போன்ற பிரச்சினைகளை, ஒரு அரசாங்கம் மனது வைத்தால், உரிய நடவடிக்கை எடுத்துத் தீர்க்க முடியாதா?
ஒரேநேரத்தில் உள்ளாட்சித் தேர்தலை மாநிலம் முழுக்க நடத்துவதற்குத்தான் திறனற்றுப் போனது என்றால், வெங்காய விலையையுமா கட்டுப்படுத்திடத் திராணியற்றுப் போய்விட்டது?
இது ஏதோ சாதாரண வெங்காயம்தானே என்று ஆட்சியாளர்கள் நினைக்கக் கூடாது. கடந்த காலத்தில் தேர்தல் முடிவுகளை - நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளையே, மாற்றக் கூடிய முக்கியமான அம்சமாக வெங்காயத்தின் விலைகள் இருந்துள்ளன.
1980-ல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கான பிரச்சாரத்தில், வெங்காயம் முக்கியப் பங்கு வகித்தது. "கூட்டணி அரசின் தோல்வியால் வெங்காயத்தின் விலை அதிகமாக உயர்ந்துவிட்டது" என்று இந்திரா காந்தி அம்மையார் தீவிரப் பிரச்சாரம் செய்தார். அதில் அவர் வெற்றியும் பெற்றார்.
1998-ல் மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் இருந்தபோது, டெல்லி யூனியன் பிரதேசத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தது. வெங்காயத்தின் விலை அதிகமாக உயர்ந்ததுதான் அதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது.
வெங்காயத்தைத் தூக்கி அமைச்சர்கள், அதிகாரிகள் மீது வீசிய காட்சிகளை எல்லாம் கண்கூடாகக் கண்டோம். ஏனென்றால், அந்த அளவுக்கு வெங்காயம், மக்களின் வாழ்க்கையோடு - உணவுத் தயாரிப்பு முறைகளோடு இரண்டறக் கலந்துவிட்ட ஒன்றாகும்.
'நான் வெங்காயம், பூண்டு சாப்பிடுவது இல்லை' என்று மத்திய அமைச்சர் ஒருவரே நாடாளுமன்றத்தில் சொல்கிறார் என்றால், வெங்காயம், பூண்டு போன்ற பொருட்களை சாப்பிடுவதைத் தவறு என்று சொல்கிறாரா? முன்னேறிய வகுப்பு எண்ணத்தோடு அப்படிச் சொல்கிறாரா? பூண்டு விலையும் 40 சதவிகிதம் அதிகரித்துவிட்டதாக வணிகர்கள் சொல்கிறார்கள். மக்களின் வயிற்றில் கை வைக்கும் இந்த விலைவாசி உயர்வு குறித்து மத்திய - மாநில அரசுகளுக்குச் சிறிதும் அக்கறை இல்லை என்பது, அவர்களின் நடவடிக்கைகளிலிருந்து தெரிகிறது.
விவசாய நாடு என்று சொல்லிக் கொள்கிறோம். ஆனால் அன்றாட உணவுப் பொருளான வெங்காயம் குறித்த முறையான திட்டமிடுதலே இன்றைய ஆட்சியாளர்களுக்கு இல்லை.
அடிப்படை நிலையில் திட்டமிடல், சேமித்து வைக்க நல்ல வசதிகள், உணவுப் பதப்படுத்தலுக்கான அறிவியல் முறைகள் மூலம் இந்தப் பிரச்சினையைச் சமாளித்து உதவலாம். உணவுப்பொருளின் விலை லேசாக உயரும்போதே, அது தொடர்பான ஆலோசனையை ஆட்சியாளர்கள் செய்தால்தான், விலை அதிகமாக உயராமல் கட்டுப்படுத்த முடியும். இரண்டுமாத காலமாக தொடமுடியாத உயரத்துக்கு விலை உயர்ந்த பிறகு, ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்வோம் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் சொல்லி இருக்கிறார். இந்த விலை உயர்வால் மக்கள் படும் அவதியை இந்த ஆட்சியாளர்கள் இப்போதுதான் உணர்கிறார்களா?
'வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் போகிறோம். ஜனவரி 20-ஆம் தேதிக்குப் பிறகு தாராளமாகக் கிடைக்கும்' என்று மத்திய உணவுத்துறை அமைச்சர் தன்வே ராவ்சாகிப் தாதாராவ் சொல்லி இருக்கிறார். அமைச்சர் சொல்வதே ஜனவரி 20 என்றால், நிலைமை மொத்தமாகச் சீரடைய இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகலாம். மத்திய மாநில அரசுகளின் மெத்தனம் காரணமாக மக்களின் அடிவயிறு கலங்கிக் கிடக்கிறது.
வெங்காயம் மட்டுமல்ல, பூண்டு, முருங்கைக்காய், சமையல் எண்ணெய் ஆகியவையும் பற்றாக்குறை, விலை ஏற்றங்கள் குறித்த செய்திகள் வருகின்றன. உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு இன்றியும் நியாய விலையிலும் கிடைப்பதற்கு மத்திய - மாநில அரசுகள் கவனம் செலுத்துவது மட்டுமின்றி, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்தியாவசியப் பொருட்களின் இருப்பிலும், விலையிலும், விநியோகத்திலும் அலட்சியம் காட்டினால், மக்களிடம் இருந்து வெகு தூரம் அந்நியப்பட்டுப் போய் விடுவீர்கள் என்று எச்சரிக்கை செய்வது எனது கடமை ஆகும்." என குறிப்பிட்டுள்ளார்.