சமூக வலைதளங்களான ‘பேஸ்-புக்’ மற்றும் ’வாட்ஸ்-அப்’ ஆகியவற்றில் கடந்த சில தினங்களாக பரபரப்பு வீடியோ காட்சி ஒன்று வெளியானது.
அந்த வீடியோ காட்சியில், வெள்ளை சட்டை அணிந்த வாலிபர் ஒருவர் 4-வது மாடியில் நின்று கொண்டு ஒரு நாயை அதன் முதுகு மற்றும் தலையை பிடித்தபடி தூக்கி வீச தயாராக இருக்கிறார். அப்போது அந்த கட்டிடத்தின் உயரம் வீடியோவில் காட்டப்படுகிறது.
சிறிது நேரத்தில் நாயை அந்த நபர் மாடியில் இருந்து தூக்கி கீழே வீசி எறிகிறார். தரையில் விழுந்த நாய் வலி தாங்க முடியாமல் கதறி துடிக்கிறது. இந்த வீடியோ காட்சியை செப்போனில் படம் எடுத்த நபர் ‘பேஸ்புக்’ மற்றும் ‘வாட்ஸ்-அப்’ போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக தங்களது நண்பர்களுக்கு அனுப்பினார்.
இந்த வீடியோ காட்சியை பார்த்த விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து விலங்குகள் நல வாரியத்தில் பணியாற்றும் ஆண்டனி கிளமெண்ட் ரூபன் குன்றத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பிராங்டிரூபன் வழக்குப்பதிவு செய்து மாடியில் இருந்து நாயை தூக்கி வீசியவர்கள் யார்? சம்பவம் நடந்த இடம் எது? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில் மாடியில் இருந்து நாயை தூக்கி வீசியவர் திருநெல்வேலியைச் சேர்ந்த கவுதம் சுதர்சன் (வயது 22) என்றும், அந்தக்காட்சியை செல்போனில் படம் பிடித்தவர் அவரது நண்பர் ஆசிஸ்பால் என்பதும் தெரியவந்தது. இருவரும் குன்றத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் இறுதி ஆண்டு படித்து வருகிறார்கள்.
மாணவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்த நிலையில் மாணவர்களின் பெற்றோரே போலீஸில் ஒப்படைத்தனர். இதையடுத்து மாணவர்கள் இருவரும் ஸ்ரீபெரும்பதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அழைத்துச்செல்லப்பட்டனர்.