மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு; பொதுமக்கள் வரவேற்ப்பு!

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், மேட்டூர் அணை நீர்மட்டம் 71.70 அடியாக குறைந்தது!

Last Updated : Jan 25, 2019, 10:15 AM IST
மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு; பொதுமக்கள் வரவேற்ப்பு! title=

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், மேட்டூர் அணை நீர்மட்டம் 71.70 அடியாக குறைந்தது!

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதாலும், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை குறைந்துள்ளதாலும் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. 

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று 71.91 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 71.70 அடியாக குறைந்துள்ளது.

இதற்கிடையில் அணையின் நீர்மட்டம் குறைய குறைய, மேட்டூர் அணை கட்டப்படுவதற்கு முன்னதாக அணையின் நீர்த்தேக்கப்பகுதிகளில் இருந்த ஜலகண்டேஸ்வரர் கோவில், மற்றும் அந்த கோவிலின் முகப்பில் இருந்த நந்தி சிலை, கோட்டையூரில் இருந்த ராஜா கோட்டை, புதுவேலமங்கலத்தில் இருந்த வீரபத்திரன் கோவில், பண்ணவாடியில் இருந்த இரட்டை கிறிஸ்தவ கோபுரங்கள் தென்படுகின்றன.

முன்னதாக கடந்த 11-ஆம் நாள் அணையின் நீர்மட்டம் 76 அடியாக குறைந்தபோது பண்ணவாடி நீர்தேக்கப்பகுதியில் தண்ணீரில் மூழ்கியிருந்த கிறிஸ்தவ கோபுரம் வெளியே தெரிந்தது. இந்நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71.70 அடியாக குறைந்துள்ளதால் பண்ணவாடி நீர் தேக்கப்பகுதியில தண்ணீரில் மூழ்கியிருந்த நந்தி சிலை வெளியே தெரிய தொடங்கியுள்ளது.

இந்த புராதன நினைவு சின்னத்தை பார்ப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் வந்து போவதால் தற்போது பண்ணவாடி பரிசல்துறை சுற்றுலா தலமாக மாறியுள்ளது.

Trending News