மின்வெட்டு அபாயம்..! நிலக்கரித் தட்டுப்பாடு...அறிக்கைகள்...ஆலோசனைகள்...!

ஆங்காங்கே மின்வெட்டுப் பிரச்சனை, நிலக்கரி தட்டுப்பாடால் காத்திருக்கும் பெரும் ஆபத்து.!  

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Apr 21, 2022, 05:14 PM IST
  • தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் 3 மணி நேரம் மின்வெட்டு
  • நிலக்கரி இல்லாமல் தவிக்கும் மாநிலங்கள் - கைவிரிக்கிறதா மத்திய அரசு ?
  • நிலக்கரி தட்டுப்பாடு ஏன் வந்தது ? பின்னுள்ள அரசியல் என்ன ?
மின்வெட்டு அபாயம்..! நிலக்கரித் தட்டுப்பாடு...அறிக்கைகள்...ஆலோசனைகள்...! title=

தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று 3 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இயல்பான ஒன்றாக இதை தமிழ்நாடு கடப்பதற்குள் அடுத்தடுத்த எச்சரிக்கைகள், சமிஞ்சைகள், அறிக்கைகள் வந்ததால் இந்தப் பிரச்சனை தற்போது விஸ்வரூபமெடுத்துள்ளது. மின்வெட்டு ஏன் ஏற்படுகிறது ? அதன்பின் உள்ள பிரச்சனைகள் என்னென்ன ? திடீரென இந்தப் பிரச்சனையை தற்போது தலைவர்கள் கையிலெடுக்கும் வியூகம் என்ன ? அடுக்கடுக்கான கேள்விகள் பொதுமக்கள் முன் எட்டி நிற்கின்றன. 

மேலும் படிக்க | Blackout Fears: இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறை விவகாரம்; உண்மை என்ன?

முதலில் தமிழக அரசு இந்தப் பிரச்சனையை எப்படி அணுகுகிறது என்பதை தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளின் வழி அறிந்துகொள்ளலாம். இரு நாட்களுக்கு முன்பு மின்வெட்டு பிரச்சனைத் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்கப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியது முக்கியமானவை. அதில், கடந்த மார்ச் 29ம் தேதி உச்சப்பட்ச மின் நுகர்வாக 17 லட்சத்து 196 மெகாவாட் இருந்ததாக தெரிவித்தார். மேலும் தற்போது மின்சார பற்றாக்குறை 2500 மெகாவாட் உள்ளதால், அதனை சீர் செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். குறுகிய கால மற்றும் மத்திய கால கொள்முதல் அடிப்படையில் ஏப்ரல் மாதத்திற்கு 3 ஆயிரத்து 47 மெகா வாட்டும் , மே மாதத்திற்கு 3 ஆயிரத்து 07 மெகாவாட்டும் மின்சாரம் பெறப்பட்டு வருவதாக குறப்பிட்டார். மேலும் 1000 மெகாவாட் மின்சாரம் சூரிய ஒளி  மின்சாரம் மற்றும் என்.எல்.சி.யிடம் 1500 மெகா வாட் மின்சாரம் பெறப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். இந்தநிலையில் நாளொன்றுக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தமிழ்நாட்டிற்கு தேவையாக உள்ள நிலையில், மத்திய அரசோ 48 ஆயிரம் டன் மட்டுமே நிலக்கரி  அளிப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். இதுமட்டுமல்லாமல், நிலைமையை சரிசெய்ய 4 லட்சத்து 80 ஆயிரம்  டன் நிலக்கரி கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஓரிரு தினங்களில் டெண்டர் நிறைவடையும் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். கடைசியாக, திமுக ஆட்சியில் மின் வெட்டே ஏற்படாது என்று உறுதிடவும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். 

Image Of SenthilBalaji

மேலும் படிக்க | விஸ்வரூபம் எடுக்கும் நிலக்கரி தட்டுப்பாடு: இருளில் மூழ்கும் அபாயம்

இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நாள், தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் மூன்று மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. பல கிராமங்களில் இரவு நேரங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. உடனடியாக இந்தப் பிரச்சனைக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று விளக்கம் அளித்துள்ளார். அதில், நேற்றிரவு மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 மெகா வாட் திடீரென தடைபட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், தனியாரிடமிருந்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார். நகர்பபுறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டாலும், ஊரகப் பகுதிகளில் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | சீனாவைப் போல இந்தியாவிலும் மின்சார நெருக்கடி வருமா? நிலக்கரி இருப்பு குறைவு

மின்வெட்டு பிரச்சனையை அமைச்சர் ட்விட்டரில் விளக்கம் கொடுத்தாலும், எதிர்கட்சிகள் இந்தப் பிரச்சனையை கையிலெடுத்துள்ளன. 750 மெகா வாட் மத்திய அரசால் திடீரென நிறுத்தப்பட்டதால் மின்வெட்டு ஏற்பட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜியின் விளக்கத்தை தனது அறிக்கையில் சுட்டிக்காட்டிய பாமக நிறுவனம் ராமதாஸ், இந்த பிரச்சனைக் குறித்து பாமக தரப்பில் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 750 மெகா வாட் மின்சாரம் மத்திய அரசால் தடைப்பட்டிருப்பது உண்மையாக கூட இருக்கலாம், ஆனால் இத்தகைய எதிர்பாராத நிகழ்வுகளை சமாளித்து மக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்குவது தான் மின்வாரியத்தின் பணி என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தின் மின் தேவையில் மூன்றில் இரண்டு பங்கு தனியாரிடமிருந்தும், ஒரு பங்கு மத்தியத் தொகுப்பிலிருந்தும் வாங்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய ராமதாஸ், இதில் தடை ஏற்பட்டால் சமாளிக்க மாற்றுத் திட்டம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், மின்தேவை அதிகரிப்பு, நிலக்கரி தட்டுப்பாடு, தமிழ்நாட்டிலேயே மின்தேவையை அதிகரிப்பதற்கான நடவடிக்கை என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், சில முக்கியமான யோசனைகளை தமிழக அரசுக்கு முன்வைத்துள்ளார். அதாவது, ‘அனல் மின் நிலையங்களில் 24 நாட்களுக்கான நிலக்கரி இருக்க வேண்டிய நிலையில், 4 நாட்களுக்கான நிலக்கரி மட்டும் தான் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு கூடுதல் கப்பல்கள் மற்றும் தொடர்வண்டிப் பெட்டிகளை ஏற்பாடு செய்து அதிக அளவிலான நிலக்கரியை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய அறிவுறுத்தியுள்ள அவர், காற்றாலை மின்னுற்பத்தியை தமிழகமே கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், இத்தகைய நடவடிக்கைகள் மூலம் தமிழகத்தை மின் வெட்டிலிருந்து காக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். 

மேலும் படிக்க | தூத்துக்குடியிலும் நிலக்கரி தட்டுப்பாடு - மின்வெட்டு அதிகரிக்கும் அபாயம்

தமிழகத்தின் இந்தப் புள்ளியில் இருந்து தேசிய அளவில் அண்டை மாநிலங்கள் மின்சார உற்பத்திக்கு என்னென்ன செய்கின்றன ? என்பது குறித்துப் பார்க்கலாம். நிலக்கரியின் மூலமே மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்பதால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான அளவுக்கு நிலக்கரி இருப்பு இருக்கும். தற்போது பல மாநிலங்களில் அந்த நிலக்கரி இருப்பு காலியாகி வருவதால், மத்திய அரசை நம்பி மாநிலங்கள் எதிர்பார்க்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், மாநிலங்களில் உள்ள நிலக்கரி இருப்பு மற்றும் தேவை ஆகியவைக் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ், நிலக்கிரி அமைச்சர் பிரகலாத் ஜோஷி மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் இணைந்து அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். மத்திய அமைச்சர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்ட மறுநாள் காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தியிடம் இருந்து ஓர் கண்டன அறிக்கை வெளிவந்துள்ளது. 

மேலும் படிக்க | தமிழகம் முழுவதும் 3 மணி நேரம் திடீர் மின்வெட்டு - இது தான் காரணமா?

அதில், 8 ஆண்டுகளாக பேசிய பேச்சுக்களின் விளைவாக இந்தியாவில் எட்டு நாட்கள் மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளது என்ற அதிர்ச்சித் தகவலை அவர் வெளியிட்டார். இதனால் மின்வெட்டு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக அறிவித்த அவர், மின்வெட்டு ஏற்பட்டால் சிறுதொழில்கள் நசுங்கும் நிலைக்குத் தள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே வெறுப்புணர்வை பரப்புவதை நிறுத்திவிட்டு மின் உற்பத்தி நிலையங்களை திறக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ராகுல் காந்தி அறிவுறுத்தி உள்ளார். 

Image Of Rahul gandhi

ராகுல்காந்தியின் இந்த அறிக்கைக்குப் பிறகே நாட்டின் உள்ள மாநிலங்களின் நிலக்கரி இருப்பு பகிரங்கமாக வெளியே தெரிய ஆரம்பித்தது. அதன்படி, ஒரு அபாயகரமான உண்மை வெளிவந்துள்ளது. நிலக்கரி பற்றாக்குறையால் 12 மாநிலங்கள் கூடிய விரைவில் இருளில் மூழ்கப்போகும் என்ற செய்திதான் அது. குறிப்பாக, குஜராத், மகாராஷ்ட்ரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் இருளில் மூழ்கும் ஆபத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்குக் காரணம், நாட்டில் உள்ள 178 அனல் மின் நிலையங்களில் சுமார் 100க்கும் குறைவான அளவில் மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு ஒருபுறம் இருந்தாலும், மத்திய அரசின் மின்சாரம், நிலக்கரி மற்றும் ரயில்வே ஆகிய மூன்று துறைகளுக்கு இடையே போதிய ஒத்துழைப்பு இல்லாதது மற்றொரு காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த ஒத்துழைப்பு இல்லாததால் விரைவில் பல்வேறு மாநிலங்களில் மின் தடை ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக கணிக்கப்படுகிறது. 

மேலும் படிக்க | தமிழகம் இருளில் மூழ்கும் ஆபத்து... உடனடியாக இதை செய்யுங்கள் - அரசுக்கு ராமதாஸ் அறிவுறுத்தல்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நிலக்கரி கையிருப்பு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. அதற்குள் மின்தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிறது. கோடைக் காலத்தில் மின்சாரம் என்பது கட்டாயம் அத்தியாவசியம். பருவ நிலை மாறுபாட்டால் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து சமாளிக்க மக்களுக்கு குறைந்தபட்ச ஆறுதலே மின்சாரம்தான். அதுவும், அடுத்த மாதம் அக்னி வெயில் வேறு தொடங்குகிறது. அதற்குள் மின்சாரத் தட்டுப்பாட்டை நீக்கி, நிலக்கரித் தட்டுப்பாட்டை குறைத்து, மாநிலங்களுக்கான மின்சாரத் தேவையை பூர்த்தி செய்வது மத்திய, மாநில அரசுகளின் கடமையல்லவா ?! கோடை வெயிலின் கோரத் தாண்டவத்தில் இருந்து தமிழக மக்களை மீட்டெடுக்கும் சவாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு எப்படி சமாளிக்கப் போகிறது என்ற கேள்வியே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.! ?! ஏனெனில், வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளில் மின்சாரமும் ஒன்றல்லவா.!

மேலும் படிக்க | "4 ஆயிரம் மெகாவாட் சூரியயஒளி மின்திட்டம் விரைவில் தொடக்கம் அமைச்சர் செந்தில்பாலாஜி "

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News