ஐகோர்ட் பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேறியது!!

- கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ்க் குடி! !

Last Updated : Aug 1, 2016, 02:44 PM IST
ஐகோர்ட் பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேறியது!! title=

சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனி தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது அவர் கூறியதாவது:- கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ்க் குடி! !

உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்படுகின்றன, இருந்தாலும், பல்வேறு மொழிகளுக்கு இல்லாத சிறப்பு அன்னைத் தமிழ் மொழிக்கு உண்டு. வார்த்தைக்கு பஞ்சமில்லா மொழி தமிழ்மொழி. தமிழ்ச் சொல்லுக்கு தனி ஓசையுண்டு! எண்ணமெல்லாம் ஈர்க்கும் திறனுண்டு! இன்னும் எத்தனையோ சிறப்புகள் உண்டு! இயல், இசை, நாடகம் என்று முத்தமிழாய்ப் பிரித்து மொழியில் தனித் தன்மையை பழந்தமிழ் பெரியோர்கள் உண்டாக்கினர். யாழின் இனிமையோ, குழலின் நாதமோ என்று வியந்திடும் வண்ணம் அழகிய சொற்களைக் கொண்ட மொழி தமிழ் மொழி.  

மெட்ராஸ் மாநகர் என்பது 1996-ம் ஆண்டைய சட்டத்தின் மூலம் சென்னை மாநகர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை என்பது சென்னை மாநகரை மட்டுமே குறிக்கும்.சென்னை மாநகரில் அமைந்துள்ள உயர்நீதிமன்றம் தமிழ்நாடு முழுமைக்குமான உயர்நீதிமன்றமாக விளங்குவதாலும், 1956-ம் ஆண்டு மொழிவாரி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, பெயரிடப்பட்டதன் காரணமாக, அந்தந்த மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்கள் அந்தந்த மாநிலங்களின் பெயரிலேயே அழைக்கப்படுவதாலும், தற்போது மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என அழைக்கப்படும் உயர்நீதிமன்றத்தின் கிளை மதுரையில் செயல்பட்டு வருவதாலும்; தமிழ்நாடு முழுமைக்குமான உயர்நீதிமன்றத்தை “சென்னை உயர்நீதிமன்றம்” என அழைக்கப்படுவது பொருத்தமற்றதாக இருக்கும் என்பதாலும், தற்போது மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என அழைக்கப்படும் உயர்நீதிமன்றம், “தமிழ்நாடு உயர்நீதிமன்றம்” என அழைக்கப்படுவதே சரியானது என்பதால், 

மக்களவையில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள சட்ட முன்வடிவில் “சென்னை உயர்நீதிமன்றம்” என்பதற்குப் பதிலாக “தமிழ்நாடு உயர்நீதிமன்றம்” என்று மாற்றம் செய்யப்பட வேண்டுமென மத்திய அரசை இந்த மாமன்றம் கேட்டுக்கொள்கிறது"

இந்தத் தீர்மானத்தை இம்மாமன்றம் ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டும் என்று அனைத்து மாண்புமிகு உறுப்பினர்களையும், பேரவைத் தலைவர் வாயிலாகக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

தீர்மானத்தை வரவேற்று உறுப்பினர்கள் பேசினார்கள். தீர்மானத்தை தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆதரித்தன. இதைத் தொடர்ந்து முதல்- அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம் 

ஏகமனதாக நிறைவேறியது.

Trending News