இந்தியாவின் தந்தை மகாத்மா காந்தியடிகளின் (Mahatma Gandhi) 150-ஆவது பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவ, மாணவியருக்கு நடத்தப்படும் அறிவுத்திறன் புதிர்ப்போட்டிகளில் செம்மொழித் தமிழ் மொழி (Tamil Language) புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. அனைத்து மொழிகளையும் அரவணைப்பதால் மட்டுமே தேச ஒற்றுமையை வலுப்படுத்த முடியும் என்ற நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
காந்தியடிகளின் 150-ஆவது பிறந்த நாள் அறிவுத்திறன் போட்டிகளை என்.சி.இ.ஆர்.டி எனப்படும் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு நடத்துகிறது. சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளுக்கு நேரடியாகவும், மாநிலப் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளுக்கு மாநில அரசுகளின் மூலமாகவும் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தை கடைபிடிக்கும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகியவற்றில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தின் கண்காணிப்பில் இன்று காலை 10.00 மணி முதல் நவம்பர் ஒன்றாம் தேதி நள்ளிரவு வரை ஒரு மாதத்திற்கு இந்தப் போட்டிகள் இணையவழியில் நடத்தப்படுகின்றன. ஆனால், இப்போட்டிகள் ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் மட்டும் தான் நடத்தப் படும்; தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்படாது என்ற அறிவிப்பு தான் ஏமாற்றமளிக்கிறது.
ALSO READ | சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ் பாடவேளைகளை குறைக்கக் கூடாது: PMK
நாடு முழுவதும் அனைத்து நிலை பள்ளி மாணவர்களுக்கும் நடத்தப்படும் அறிவுத்திறன் போட்டிகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை புறக்கணித்து விட்டு ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டும் நடத்துவது திட்டமிட்ட இந்தித் திணிப்பு ஆகும். மூன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு தான் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கோ, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கோ இத்தகைய போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு ஆங்கிலப் புலமை இருக்க வாய்ப்பில்லை. இதை கருத்தில் கொண்டு தமிழிலும் இப்போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.
தேசிய அளவிலான பள்வேறு போட்டித் தேர்வுகளும், நுழைவுத் தேர்வுகளும் தமிழ் மொழியிலும் நடத்தப்படுகின்றன. ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட அறிவியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக ஐஐடி கூட்டு நுழைவுத் தேர்வுகளின் முதன்மைத் தேர்வு வரும் ஜனவரி மாதம் முதல் தமிழ் உள்ளிட்ட 10 மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழ் மொழியிலும் இந்த நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுவதை சட்டப் போராட்டத்தின் மூலமாகவும், அரசியல் அழுத்தங்கள் மூலமாகவும் பாட்டாளி மக்கள் கட்சி சாத்தியமாக்கியிருக்கிறது. 12-ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியருக்கான நுழைவுத்தேர்வுகளையும், பட்டம் பெற்ற மாணவர்களுக்கான போட்டித் தேர்வுகளையும் தாய்மொழியில் நடத்துவது அவசியமாகியுள்ள நிலையில், தொடக்கப்பள்ளி மாணவர்களும் பங்கேற்கும் போட்டியை ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டும் நடத்துவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்த வரைவு அறிவிக்கையை மாநில மொழிகளில் வெளியிடுவது குறித்த வழக்கை அண்மையில் விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிக்கைகள் அனைத்தையும் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் வெளியிட வேண்டும்; அதற்கு ஏற்ற வகையில், இந்திய அலுவல் மொழி சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இக்கருத்து இத்தகைய அறிவுத்திறன் போட்டிகளுக்கும் பொருந்தும். உச்சநீதிமன்றத்தின் அறிவுரைக்குப் பிறகும் இளம் தளிர்கள் பங்கேற்கும் போட்டிகளை இந்தி மொழியில் நடத்துவது இந்தித் திணிப்பு என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை; இதை அனுமதிக்க முடியாது.
காந்தியடிகள் பிறந்தநாளையொட்டிய அறிவுத்திறன் போட்டிகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் தான் நடத்தப்படுகின்றன; தமிழில் நடத்தப்படவில்லை என்பது தெரிந்தும் அப்போட்டிகளை தமிழக அரசு அனுமதித்தது பெரும் தவறாகும். தமிழை புறக்கணித்து விட்டு நடத்தப்படும் எந்தப் போட்டியையும் தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என்ற நிலைப்பாட்டை அரசு எடுத்திருந்தால் அது பாராட்டத்தக்கதாக இருந்திருக்கும். இப்போதும் கூட மாநிலப் பாடத்திட்ட பள்ளிகளில் இத்தேர்வுகளை நிறுத்தி வைக்கலாம்.
மத்தியில் ஆளும் அரசு மாநில மொழி பேசும் மக்களின் உணர்வுகளை மதித்து செயல்பட வேண்டும். மொழி என்பது மிகவும் உணர்ச்சிமயமானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மறைமுகமான வழிகளில் இந்தியைத் திணிக்கும் போக்கை கைவிட்டு, மகாத்மா காந்தியடிகளின் 150-ஆவது ஆண்டு விழா போட்டிகளை தமிழிலும் நடத்துவதற்கு முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி, மொழிச் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும்; அதற்காக அலுவல் மொழிச் சட்டத்தை திருத்தி அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என்றார்.
ALSO READ | தமிழை கட்டாயப் பாடமாக்காத சிபிஎஸ்இ பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை தேவை!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR