காஞ்சிபுரத்தில் அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தை பொற்றாமரை குளத்து நீரால் தற்போது நிரப்ப வேண்டாம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது!
சென்னையைச் சேர்ந்த அசோகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் குளத்திற்குள் அத்தி வரதர் சிலை இருந்ததால் நீண்ட நாட்களாக துார் வாரி சுத்தம் செய்யப்படவில்லை. தற்போது அத்தி வரதர் சிலை குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளதால் சுத்தம் செய்து துார் வார இது உகந்த நேரம். எனவே குளத்தை துார் வாரி சுத்தம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு கோவில் குளத்தை சிறப்பு பிளீடர் மகாராஜா, கூடுதல் பிளீடர் கார்த்திகேயன் நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டார். குளத்தில் நிரப்பப்பட உள்ள நீரின் தன்மை குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்ய நீதிபதி உத்தரவிட்டிருந்தார். வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில், 'பொற்றாமரை குளத்து நீர் குடிப்பதற்கு தகுதியானது தான். அந்த தண்ணீருடன் ஆழ்துளை கிணற்று நீரையும் பயன்படுத்தலாம்' என தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து சிலை வைக்கப்படும் இடத்தை சுத்தமான தண்ணீரால் நிரப்ப வேண்டும். அனந்தசரஸ் குளத்தை எந்த தண்ணீரால் நிரப்ப வேண்டும் என்பது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை அளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது அறநிலையத் துறை சார்பில் சிறப்பு பிளீடர் மகாராஜா 'அத்திவரதர் சிலை சுத்தமான தண்ணீரில் உள்ளது. பொற்றாமரை குளத்து நீர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது; அறிக்கை வர வேண்டியதுள்ளது' என தெரிவித்தார்.
இதையடுத்து, 'அறிக்கை வரும் வரை பொற்றாமரை குளத்து நீரால் அனந்தசரஸ் குளத்தை நிரப்ப வேண்டாம்' என நீதிபதி அறிவுறுத்தினார். மேலும் வழக்கின் விசாரணையை 22-ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.