தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள கடல் பகுதிகளில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால் மீனவர்கள் 5, 6, 7 ஆகிய தேதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவிக்கையில்...
குமரிக்கடல் முதல் தெற்கு ஆந்திர கடற்கரை வரை நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து குமரி முதல் வடக்கு கேரளா நிலவி வருகிறது. எனவே அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும். மேலும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள இந்திய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக தென்மேற்கு வங்கக்கடல், மன்னா வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளுக்கு 5, 6, 7 ஆகிய தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே வரும் டிச.,6-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளது என குறிப்பிட்டுள்ளது.