தமிழக அரசு, அமைச்சர்களின் அலட்சியம் தான் 17 பேரின் இறப்புக்கு காரணம்: MKS

மேட்டுப்பாளையம் அருகே சுற்றுச்சுவர் இடிந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்துக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்!!

Updated: Dec 3, 2019, 12:37 PM IST
தமிழக அரசு, அமைச்சர்களின் அலட்சியம் தான் 17 பேரின் இறப்புக்கு காரணம்: MKS

மேட்டுப்பாளையம் அருகே சுற்றுச்சுவர் இடிந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்துக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் பகுதி அருகே ஏ.டி காலனியில் நேற்று அதிகாலை வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு காரணமான சுற்றுச்சுவர் கட்டிய வீட்டின் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அவரை கைது செய்ய வலியுறுத்தியும் மேட்டுப்பாளையம் சிக்ஸ் கார்னர் பகுதியில் சாதிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் திடீரென மேட்டுப்பாளையம் உதகை சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த சுவரை அப்புறப்படுத்தப் பல முறை கூறியும் அதனை அலட்சியப்படுத்தி விபத்தை ஏற்படுத்தி 17 உயிரை காவு வாங்கிய வீட்டின் உரிமையாளரை உடனடியாக கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கூறி போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். 

இதனை தொடர்ந்து, உயிரிழந்த விவகாரத்தில், உடலை வாங்க மறுப்பு தெரிவித்த உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இலவச வீடு, இழப்பீடு தொகையை 25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், வன்கொடுமை தடுப்பு சட்டப்படி வழக்கு பதிவு செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் மேட்டுப்பாளையத்திற்கு நேரில் சென்று விபத்து ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தனது ஆறுதலை தெரிவத்தார்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்; தமிழக அரசு மற்றும் அமைச்சர்களின் அலட்சியத்தால், விபத்து ஏற்பட்டு 17 பேர் இறந்திருக்கிறார்கள். அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் 17 பேரின் உயிர் போயிருக்காது. உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள 4 லட்சம் ரூபாய் நிதியுதவி போதாது. கூடுதல் நிதியுதவி வழங்க வேண்டும். 17 பேர் இறப்பிற்காக போராடியவர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்துக்கு காரணமான அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.