காவிரியில் இருந்து நீர்வரத்து அதிகரிப்பு; மீண்டும் நிரம்பும் மேட்டூர் அணை

தெற்கு கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து உள்ளது.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Nov 20, 2019, 11:29 AM IST
காவிரியில் இருந்து நீர்வரத்து அதிகரிப்பு; மீண்டும் நிரம்பும் மேட்டூர் அணை
Pic Courtesy : ANI

புதுடெல்லி: தென்னிந்தியா முழுவதும் வடகிழக்கு பருவமழை ஆதிக்கம் செலுத்துகிறது, முக்கியமாக தமிழகம், கேரளா, தெற்கு ஆந்திரா மற்றும் தெற்கு கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இன்றும் தெற்கு கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து உள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. 

இந்த வருடம் முழுவதும் காவேரி நதி பாயும் இடங்கள் மற்றும் கர்நாடகாவில் நல்ல மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. ஏற்கனவே இந்த ஆண்டில் சேலத்தில் இருக்கும் மேட்டூர் அணை மூன்று முறை நிரம்பியது. தற்போது, நான்காவது முறையாக மேட்டூர் அணை நிரம்ப உள்ளது. 

இன்றைய நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. அதில் 93.47 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 7,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதேபோல மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து வினாடிக்கு 8,143 கனஅடியாக உள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளதால், காவிரி படுக்கை பகுதிகளில் உள்ள கிராமத்திற்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு வானிலை நிலவரம்:

அடுத்த ஐந்து நாட்களுக்கு தென்னிந்தியா மற்றும் வடகிழக்கு இந்தியா முழுவதும் அதிகபட்ச வெப்பநிலை சராசரியை விட அல்லது வெப்பமாக இருக்கும். காலை குறைந்தபட்சம் நாடு முழுவதும் இயல்பை விட வெப்பமாக இருக்கும்.

அதேபோல தமிழகம் மற்றும் கேரளாவில் மிகவும் பரவலாக மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று அதிகாலை முதல் சென்னையில் (Chennai) பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை (Rain) பெய்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதாவது வடபழனி, மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, கிண்டி, மெரினா உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்தது. அதேபோல தமிழ்நாட்டில் (Tamil Nadu) உள்ள கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி (Puducherry) மாநிலத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் (Regional Meteorological Centre) அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் மற்றும் வெப்பச்சலனம் காரணமாகவும் ஒரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று அதிகாலை நல்ல மழை பெய்துள்ளது. வானிலை மையம் தரப்பில், சென்னையை பொறுத்த வரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அங்கு மிதமான மழை அல்லது சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக 32 டிகிரி வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 25 டிகிரி வெப்பநிலை செல்சியஸ் இருக்கும் எனவும் அறிவித்து உள்ளது.

தமிழகத்தை பொறுத்த வரை நேற்று கடலூர் (Cuddalore) மாவட்டத்தில் அதிக அளவில் 6 செ.மீ மழை பதிவாகி உள்ளது. அதற்கு அடுத்து தூத்துக்குடி (Toothukudi) மாவட்டத்தின் திருச்செந்தூர் (Tiruchendur) மற்றும் கடலூர் கலெக்ட்ரேட் பகுதியில் 5 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

இந்திய வானிலை நிலவரம்:

வட மாநிலங்களில் பனிப்பொழிவு படிப்படியாக உயர்ந்து வருகிறது. இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் வியாழக்கிழமை முதல் வெள்ளி வரை பனிப்பொழிவு அதிக அளவில் இருக்கும். சனிக்கிழமையன்று சற்று வீழ்ச்சியடையும் எனக் கூறப்பட்டு உள்ளது. வார இறுதிக்குள் உள்நாட்டில் 100 செ.மீ. அளவில் ஆலங்கட்டி மழை மற்றும் இடியுடன் கூடிய மழை வருவது சாத்தியமாகும்.

பனி / மழை மற்றும் இடியுடன் கூடிய மழை ஜம்மு காஷ்மீர் மீது கணிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, கர்நாடகா மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது.

இமாச்சலப் பிரதேசம், அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் பனி / மழை சாத்தியமாகும். கோவா, அசாம் மற்றும் மேற்கு வங்காளங்களில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, ஒடிசா, ஜார்கண்ட், பீகார், உத்தரபிரதேசம், உத்தரகண்ட், ஹரியானா, டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் சத்தங்கர் ஆகிய மாநிலங்களில் வறண்ட வானிலை நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.