தமிழகத்தின் பல பகுதிகளிலும் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
2014-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. இதனால் தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு பெருகியது. ஜல்லிக்கட்டு மீதான தடையை விலக்கி, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதில் இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும் அதிக அளவில் பங்கேற்று வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆனால் உடனடியாக பொங்கலுக்கு முன் ஜல்லிக்கட்டு வழங்கில் தீர்ப்பு வழங்க முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. இதனால் போராட்டங்கள் மேலும் வெடித்தது.
அனுமதி கேட்டு போராட்டங்கள் ஒருபுறம் நடைபெற்றாலும், தடையை மீறி சில இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகேயுள்ள பொதும்பு கிராமத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. 15க்கும் மேற்பட்ட காளைகளும், 50க்கும் மேற்பட்ட வீரர்களும் பங்கேற்றனர்.
ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதே போன்று தேனி மாவட்டம் கூடலூரிலும் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளது. 10 மாடுகளை கொண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளது.
அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு, 300 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அனுமதியின்றி பேரணி நடத்தி வருகின்றனர். இவர்கள் கருப்பு கொடியுடன் பேரணியாக சென்று வருவதால் அப்பகுதியில் பதற்றமான நிலை காணப்படுகிறது. பொங்கல் பண்டிகை தினத்தன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.