மாநில தழுவிய விவசாயிகள் போராட்டம்- மு.க.ஸ்டாலின் ஆதரவு

Last Updated : Jan 2, 2017, 04:29 PM IST
மாநில தழுவிய விவசாயிகள் போராட்டம்- மு.க.ஸ்டாலின் ஆதரவு title=

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வரும 5-ம் தேதி மாநிலம் தழுவி மறியல் போராட்டம் நடத்தவிருப்பதாக விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். 

இது தொடர்பாக சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் தற்கொலை மூலம் உயிரை மாய்த்து வருகின்றனர். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஒரு அறிவிப்பு கூட விடவில்லை. காவிரி மேலாண்வாரியம் அமைத்தால் மட்டுமே தீர்வு காண முடியும். வறட்சி மாநிலம் அறிவிப்பு என்பது சட்டத்திற்குட்பட்ட நடவடிக்கை. மழை சதவீத அடிப்படையில் மத்திய அரசுதான் அறிவிக்க வேண்டும். இதில் காலம் கடத்துவது சரியல்ல. 

அரசியல் கண்ணோட்டத்துடன் மத்திய, மாநில அரசுகள் நடந்து கொள்கிறது. தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது. நீர் நிலை ஆதாரங்கள் குறைந்து விட்டன. குளங்கள், ஏரிகள் தூர் வாரப்பட வேண்டும். குடிநீர் பிரச்சனைகள் சமாளிக்கப்பட வேண்டும். 

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வலியுறுத்தி வரும் ஜனவரி 5-ம் தேதி மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடக்கவுள்ளது. இதற்கு திமுகவின் ஆதரவை கேட்டு எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினோம் என அவர் கூறினார்.

பிறகு மு.க. ஸ்டாலின் கூறியதாவது:

உடனே சட்டமன்றத்தை கூட்டி தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். இது குறித்து தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இது வரை எந்த பதிலும் அரசிடம் இருந்து வரவில்லை

முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்திக்கவும் கடிதம் கொடுத்து இருக்கிறோம். ஆனால் செவிடன் காதில் ஊதிய சங்கு போல எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள். இது வேதனை அளிக்கிறது. விவசாயிகள் போராட்டத்திற்கு எப்போதும் திமுக ஆதரவு அளித்து இருக்கிறது. அதன் அடிப்படையில் 5-ம் தேதி நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கும் திமுக சார்பில் முழு ஆதரவு அளிப்போம் என அவர் தெரிவித்தார்.

Trending News