கடந்த டிசம்பர் மாதம் 5-ம் தேதி உடல் நலக்குறைவினால் ஜெயலலிதா மரணமடைந்தார். இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல் அமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால் பொதுச்செயலாளர் பதவி காலியாகவே இருந்தது. பிறகு சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த 4-ம் தேதி ஆலோசனை கூட்டம் தொடங்கியது. அன்றைய தினம் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இன்று சசிகலா 2-வது நாளாக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளை அதிமுக தொடர்ந்து நிறைவேற்றிடும். நீங்கள் எப்போதும் போல் கழகப் பணியாற்றுங்கள். மக்களுக்கும், ஆட்சிக்கும் பாலமாக இருங்கள். கழகத்தின் வளர்ச்சியை பொருத்துக் கொள்ள முடியாதவர்கள் சில ஊடகங்கள் மூலமாக எதிர்ப்பாகவும், மறைமுகமாகவும் சூழ்ச்சிகளை செய்து கழகத்துக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த முயல்கிறார்கள். அந்த சதியை முறியடிக்கும் வகையில் கழக நிர்வாகிகள் கட்சிக்காக மேலும் தீவிரமாக செயல்பட வேண்டும்.
ஜெயலலிதா ஆட்சியின் சாதனைகளை மாதம் ஒருமுறை தெருமுனை பிரசாரம், திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். 3 மாதத்துக்கு ஒருமுறை ஒன்றிய, நகர அளவில் கழக நிர்வாகிகளை அமைத்து ஆலோசித்து தீவிர கட்சிப்பணியாற்ற வேண்டும்.
6 மாதத்துக்கு ஒருமுறை மாவட்ட அளவில் நிர்வாகிகள், அனைத்து கழக தோழர்களையும் அழைத்து கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசிக்க வேண்டும். ஜெயலலிதா ஆட்சியின் திட்டங்கள் மக்களுக்கு கிடைக்கும் வகையில் உங்கள் பணி அமைய வேண்டும். நீங்கள் திறம்பட பணியாற்றுங்கள், அனைவரையும் அரவணைத்துச் செல்லுங்கள், உங்களுக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன்.
பருவ மழை பொய்த்து விட்டதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். சில பகுதிகளில் குடிநீர் பிரச்சனை ஏற்படும். அங்கெல்லாம் சென்று மக்களுக்கு நீங்கள் உதவ வேண்டும்.
பட்டாசு, தீப்பெட்டி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், கட்டுமான, சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு அண்ணா தொழிற்சங்கம் மூலம் தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும். விவசாயிகள் பிரச்சனைக்காக இந்த அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது. அரசின் திட்டங்கள் மக்களுக்கு முறையாக சென்றடைய பாடுபட வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் பேசினார்.
Chinnamma starts the second day of interaction with District level party functionaries at Party Head Quarters.
— AIADMK (@AIADMKOfficial) January 6, 2017