முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டு அறிக்கையில் கூறி இருப்பது:-
உலகத் தமிழர்களின் உள்ளங்களில் நீக்கமற நிறைந்திருப்பவர் ஜெயலலிதா. இந்த மண்ணை விட்டு மறைந்தாலும், மக்கள் இதயங்களைவிட்டு மறையாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்.
ஜெயலலிதா எங்களுக்கு இறைவன் கொடுத்த இன்னொருதாய் என்று தமிழக மக்கள் எல்லோரும் அன்று மனம் நிறைந்து வாழ்த்தினார்கள். இன்றும் வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஜெயலலிதா படம் சட்டமன்றத்தில் திறக்கப்படக் கூடாது என்று கூக்குரல் இடுகிறார்கள். 1967-ஆம் ஆண்டு ஆட்சியை இழந்த பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லையே என்ற ஆற்றாமை சிலருக்கு, ஒரு உறுப்பினரைக் கூட சட்டமன்றத்திற்கு அனுப்ப முடியவில்லையே என்ற வயிற்றெரிச்சல் சிலருக்கு.
ஜெயலலிதா மறைந்த பிறகும் கூட.,அவரது லட்சியங்களை நிறைவேற்ற உறுதி கொண்டிருக்கும் நமது எழுச்சி தந்த, அதிர்ச்சி சிலருக்கு...,அவர்கள் மட்டும்தான் அம்மா திருவுருவப் படம் சட்டமன்றத்திலே இடம் பெறக் கூடாது என்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
"தெய்வத்தின் விக்ரகம் கோவிலிலே இடம் பெறக்கூடாது” என்று பக்தர்கள் சொல்லவே மாட்டார்கள். தமிழகத்தை வளமாக்கிய ஜெயலலிதா திருவுருவப்படம் சட்டமன்றத்தில் திறக்கப்படும் அந்தப் பொன்னாள் எப்பொழுது வரும் என்றுதான் தமிழக மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழினம் வெறுத்து ஒதுக்கிய சிலர், தமிழக மக்களால் தூக்கி எறியப்பட்ட சிலர் மட்டும், கொஞ்சம்கூட அரசியல் நாகரீகமே இல்லாமல் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆயிரம் கல்லூரிகள் திறந்து, பாடம் நடத்தினாலும் அவர்களுக்கு அரசியல் நாகரீகம் வரவே வராது.
ஏற்கனவே ஆண்ட சிலருக்கும், இனி ஆள நினைக்கும் சிலருக்கும், தலைசிறந்த முன்னுதாரணம் ஜெயலலிதா
பலருக்கு அரசியல் பாடமாகத் திகழ்பவர் ஜெயலலிதா படம் சட்டமன்றத்திலே திறக்கப்படுவது,சட்டமன்றத்திற்குப் பெருமை.தமிழ் நாட்டுக்கே பெருமை...,
ஏன்., உலக தமிழர்களுக்கே பெருமை...,
மக்கள் மன்றத்தில் மதிப்பிழந்து போனவர்கள், சட்டமன்றத்தின் மாண்பு பற்றிப் பேசும் அநாகரீகச் செயல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஏழரைக் கோடி தமிழக மக்களின் சார்பாகவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒன்றரைக் கோடி விசுவாசமிக்க தொண்டர்களின் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.