தான் பேசியது சரித்திர உண்மை என MNM தலைவர் கமல்ஹாசன் திட்டவட்டம்!!

தான் பேசியது சரித்திர உண்மை என்று தெரிவித்துள்ள கமல்ஹாசன், தன்னை பிரச்சாரம் செய்ய விடாமல் தடுக்க முயற்சி நடைபெறுவதாக குற்றம்சாட்டு!!

Updated: May 16, 2019, 10:05 AM IST
தான் பேசியது சரித்திர உண்மை என MNM தலைவர் கமல்ஹாசன் திட்டவட்டம்!!

தான் பேசியது சரித்திர உண்மை என்று தெரிவித்துள்ள கமல்ஹாசன், தன்னை பிரச்சாரம் செய்ய விடாமல் தடுக்க முயற்சி நடைபெறுவதாக குற்றம்சாட்டு!!

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 6 கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், தேர்தல் பிரட்சாரங்கள் சூடுபிடித்து வருகிறது. இதை தொடர்ந்து, வரும் 19 ஆம் தேதியில் ஏழாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இவற்றுடன் சேர்த்து சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 

இந்நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். தோப்பூர், சாமநத்தம், பனையூர், வில்லாபுரம், அனுப்பானடி ஆகிய இடங்களில் அவர் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய கமல்ஹாசன், நான் அரவக்குறிச்சியில் பேசியது குறித்து கோபப்படுகிறார்கள். நான் சொன்னது சரித்திர உண்மை. நான் யாரையும் சண்டைக்கு இழுக்க வில்லை. எனது பேச்சை முழுவதுமாக கேட்காமல் அதன் ஒரு பகுதியை கத்தரித்து ஊடகங்கள் வெளியிட்டன. ‘விருமாண்டி’ படத்தில் ஒரு வசனம் வரும். எதிரி ஒரு தடவைதான் சொன்னான், இவர்கள் போஸ்டர் போட்டு ஒட்டி விடுவாங்களோ? என்று. அந்த மாதிரி நான் ஒரு தடவைதான் சொன்னேன். ஊடகங்கள் பல முறை ஒளி பரப்பி விடுகின்றன.

பேச்சில் வாலையும், தலையையும் வெட்டி விட்டால் யாரை வேண்டுமானாலும் திட்டுவதாக மாற்றி விடலாம். 200 முறை ஒளிபரப்பினார்கள். எனக்கு ஏதோ ஐ.பி.சி. சட்டப்பிரிவை சொல்றாங்க போலும். நான் வக்கீலுக்கு பிள்ளை. வக்கீல் கிடையாது. என் மீது குற்றம் சாட்டுகிறீர்கள். அதை நம்புகிற மாதிரி சொல்ல வேண்டாமா? இந்த அரசியல் களத்தில் இறங்கிய பிறகு எனக்கு ஒரு இனம் மட்டும் போதுமா? மக்கள் நீதி என்ற பெயர் அடிபட்டு போய் விடுமே. பெரும்பான்மையை நோக்கி சென்று விட்டால் சரியா? மக்கள் எல்லோருக்கும் நீதி கிடைக்க வேண்டும். என்ன மதமாக இருந்தாலும், என்ன சாதியாக இருந்தாலும் சரி என அவர் தெரிவித்தார். 

திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், தம்மை இந்து விரோதி போல காட்டப் பார்ப்பதாகத் தெரிவித்தார். முன்னதாக கமல் பேச்சை தொடங்கும் முன்னர் அனுமன் சேனா என்கிற அமைப்பை சேர்ந்த 11 பேர் கமலுக்கு எதிராக கோஷம் போட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து அங்கு முழக்கமிட்ட 11 பேரையும் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.