காவலர் முனுசாமி குடும்பத்திற்கு ரூ. 1. கோடி நிதி : ஜெயலலிதா அறிவிப்பு

-

Last Updated : Jun 20, 2016, 01:33 PM IST
காவலர் முனுசாமி குடும்பத்திற்கு ரூ. 1. கோடி நிதி : ஜெயலலிதா அறிவிப்பு title=

தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 110வது விதியின் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார்.அதில் அவர் கூறி இருப்பதாவது:-

15.6.2016 அன்று கொள்ளையர்களை பிடிக்கச் சென்றபோது உயிரிழந்த ஓசூர் காவலர் முனுசாமியின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகர காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் கண்ணன், தலைமைக் காவலர்கள் முனுசாமி, தனபால், சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், பாரதிதாசன் நகர் அருகே செயின் பறிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களை பிடிக்க முற்பட்டனர். அப்போது சந்தேக நபர்கள் கத்தியால் தாக்கியதில் ஓசூர் காவல் நிலைய தலைமைக் காவலர் முனுசாமி என்பவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். இந்த துயரச் சம்பவத்தால் மிகவும் மன வேதனைக்கு ஆளாகிய நான், உயிரிழந்த முனுசாமி குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டதுடன் 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கவும் உத்தரவிட்டிருந்தேன்.

தற்போதுள்ள அரசு விதிமுறைகளின்படி 5 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டிருந்தாலும், கொள்ளையரைப் பிடிக்கும் முயற்சியில் உயிரிழந்த முனுசாமி அவர்களின் குடும்பத்தினருக்கு இது போதுமான நிவாரணம் ஆகாது என்பதே எனது திடமான கருத்தாகும். எனவே முனுசாமியின் உயரிய தியாகத்தைக் கருத்தில் கொண்டு அவரது குடும்பத்திற்கு நிவாரண உதவியாக ஒரு கோடி  ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இதுபோன்ற வீரதீர செயல்களில் உயிரிழப்பு அல்லது பலத்த காயங்களுக்கு உள்ளாகும் காவல்துறையினருக்கு வழங்கப்பட வேண்டிய கருணைத்தொகையை உயர்த்தி நிர்ணயிக்கவும், அதற்காக தற்போதுள்ள அரசாணையை மாற்றி புதிய அரசாணையை வெளியிடவும் தலைமைச் செயலருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

உயிரிழந்த முனுசாமியின் மகள் ரக்ஷனாவின் உயர் கல்விச் செலவை தமிழக அரசே ஏற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

Trending News