புதுச்சேரியில் கவர்னர்ரான கிரண்பேடி முதல் அமைச்சர் நாராயணசாமியுடன் ஏற்பட்டுள்ள மோதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் முறையிட்டுள்ளார்.
புதுச்சேரியில் மருத்துவ முதுகலை படிப்புக்கான கலந்தாய்வின்போது புதுச்சேரி துணைநிலை கவர்னராகப் பதவி வகிக்கும் கிரண் பேடி அதிரடியாகச் செயல்பட்டார். அப்போது, மருத்துவக் கலந்தாய்வு நேர்மையாக நடைபெறவில்லை என்றும், புதுச்சேரி முதல்வரின் ஆட்சி குறித்தும் கிரண் பேடி சமூக வலைதளத்தில் புகார்கள் பதிவிட்டு வந்தார்.
இதைத்தொடர்ந்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும், ‘கிரண்பேடி அரசு குறித்தத் தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதைத் தவிர்க்க வேண்டும்’ என கூறி இருந்தார்.
இந்நிலையில், மீண்டும் கிரண் பேடி சமூக வலைதளங்களில் நாராயணசாமியை தாக்கத் தொடங்கினார். இதேபோல் இருவரும் மாறி மாறி சமூக வலைதளங்களில் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சில நாள்களுக்கு முன்னர் டெல்லி சென்ற முதல்வர் நாராயணசாமி, கிரண்பேடியின் செயல்பாடுகள் குறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடமும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடமும் புகார் தெரிவித்துள்ளார்.