டெல்லியை மிஞ்சிய சென்னை காற்று மாசுவை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்!!
இதுகுறித்து, பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது; பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாக காற்று மாசு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. சென்னை மக்களை அவதிப்படுத்தும் காற்று மாசு அதிகரிப்பதற்கான காரணங்கள் எவை என்பது தெளிவாக தெரிந்தும், அவை சரி செய்யப்படாதது வருத்தமளிக்கிறது.
இந்தியாவில் காற்று மாசு, மூச்சுத்திணறல் என்றாலே உடனடியாக நினைவுக்கு வரும் நகரம் தில்லி தான். ஆனால், கடந்த சில நாட்களாக தில்லியை மிஞ்சும் அளவுக்கு சென்னையில் காற்று மாசு அதிகரித்திருக்கிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பிற்பகல் வரை புகை மூட்டம் காணப்படுகிறது. சாலைகளில் எதிரில் வரும் வாகனங்கள் கண்களுக்கு தெரியாத அளவுக்கு புகை மூட்டம் அதிகமாக உள்ளது. இதற்கு காரணம் சென்னையில் காற்று மாசு குறியீடு அதிகபட்சமாக 374 என்ற அளவுக்கு அதிகரித்திருப்பது தான். காற்றில் கலந்துள்ள மாசு துகள்களின் அளவு 50&க்கும் குறைவாக இருந்தால் மட்டுமே அது தூய்மையான காற்றாக கருதப்படும். தில்லியில் இந்த அளவு 254 என்ற அளவை தாண்டியதால் தான் தில்லியை கடுமையான காற்று மாசுவால் பாதிக்கப்பட்ட நகரம் என்று அறிவித்து, மாசுவை குறைக்க பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால், சென்னையில் காற்று மாசு அளவு கடந்த சில நாட்களில் தில்லியை விட அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று காற்று மாசு குறியீடு அண்ணா நகரில் 374 ஆகவும், இராமாபுரத்தில் 363, கொடுங்கையூர், மணலி ஆகிய இடங்களில் 317, ஆலந்தூரில் 312, கொடுங்கையூரில் 297 ஆகவும் அதிகரித்துள்ளது. இன்று காலை மணலியில் 320 ஆகவும், வேளச்சேரியில் 292 ஆகவும், ஆலந்தூரில் 285 ஆகவும் உள்ளது. சென்னையின் சொகுசு பகுதி என்றழைக்கப்படும் அண்ணாநகரில் தான் காற்று மாசு அதிகமாக உள்ளது. தில்லியின் காற்று மாசுவை விட 50% கூடுதலான காற்று மாசு சென்னையில் உள்ளது. இதனால் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் ஆகியோர் மூச்சு விட முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்பிலிருந்து தப்பிக்க முகமூடி அணியும்படி பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் காற்று மாசு அதிகரிப்பதற்கான காரணங்கள் மிகவும் தெளிவானவை. சென்னையின் புறநகர் பகுதிகளான கொடுங்கையூர், பெருங்குடி ஆகிய இடங்களில் உள்ள குப்பைக் கிடங்குகளில் இருந்து மீத்தேன் உள்ளிட்ட நச்சு வாயுக்கள் வெளியாவதும், அடிக்கடி அந்த குப்பைக் கிடங்குகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டதும் தான் காற்று மாசு ஏற்பட முக்கிய காரணங்கள் ஆகும். இவைதவிர, சென்னையின் பல பகுதிகளில் குப்பைகள் எரிக்கப்படுவது, தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் புகை, போக்குவரத்து காரணமாக ஏற்படும் புகை, சீரமைக்கப்படாத சாலைகளில் இருந்து எழும் புழுதி ஆகியவையும் சென்னையின் காற்று மாசுக்கு முக்கியக் காரணங்கள் ஆகும். சென்னையின் காற்று மாசு என்பது ஏதோ இப்போது தான் புதிதாக ஏற்படும் சிக்கல் அல்ல. காலம் காலமாகவே சென்னையில் காற்று மாசு ஏற்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. தென்மேற்கு காற்றும், வடகிழக்கு காற்றும் உரிய அளவில் வீசும் போது மாசு கலந்த காற்று கடலுக்குள் இழுத்துச் செல்லப்படும். ஆனால், இப்போது போதிய அளவு காற்று வீசாததன் விளைவாகவே சென்னையின் காற்று மாசு வெளிப்படையாகியுள்ளது.
சென்னையின் தட்பவெப்ப நிலை மாறி, போதிய அளவில் காற்று வீசத் தொடங்காவிட்டால் காற்று மாசு நீடிக்கும். அத்தகைய சூழலில் சென்னையில் உள்ள மக்களுக்கு ஆஸ்துமா, நுரையீரல் அடைப்பு, சளி, தோலில் அரிப்பு, மூச்சுத் திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும். அவ்வாறு ஏற்படும் பட்சத்தில் சென்னை மாநகரம் வாழத்தகுதியற்ற நகரமாக மாறிவிடும். அப்படி ஒரு நிலை ஏற்படுவதை தடுக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் உண்டு.
காற்று மாசுவைத் தடுக்க புதிய சட்டங்களோ, விதிகளோ வகுக்கத் தேவையில்லை. இப்போதுள்ள சுற்றுச்சூழல் விதிகளை முறையாக செயல்படுத்தினாலே போதுமானது. கொடுங்கையூர், பெருங்குடி ஆகிய இடங்களில் உள்ள குப்பைக் கிடங்குகள் 2015-ஆம் ஆண்டிலேயே காலாவதியாகி விட்டன. இந்த குப்பைக் கிடங்குகளை அகற்ற வேண்டும் என்பது தான் அனைத்துத் தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது. ஆனால், அதற்கு மாறாக, அந்த இரு குப்பைக் கிடங்குகளில் குப்பைகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் மையத்தை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இது காற்று மாசுவை அதிகரிக்குமே தவிர, எந்த வகையிலும் குறைக்காது. எனவே, சென்னையின் இரு பெரு குப்பைக் கிடங்குகளை மூடுவது உள்ளிட்ட சுற்றுச்சூழல் சீர்திருத்த பணிகளை மேற்கொள்வதன் மூலம் சென்னையில் காற்று மாசுவை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.