நளினி பரோல் குறித்து தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

தன் மகளின் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கேட்டு நளினி தாக்கல் செய்துள்ள மனுவிற்கு தமிழக அரசு பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிரப்பித்துள்ளது!

Updated: Apr 15, 2019, 03:29 PM IST
நளினி பரோல் குறித்து தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

தன் மகளின் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கேட்டு நளினி தாக்கல் செய்துள்ள மனுவிற்கு தமிழக அரசு பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிரப்பித்துள்ளது!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 27 ஆண்டுகளாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் நளினி. இந்நிலையில் கடந்த வாரம் தனது மகள் திருமண ஏற்பாட்டிற்காக 6 மாத காலம் பரோல் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்தார்.

மேலும் அந்த மனுவில் வழக்கறிஞர் இல்லாமல் தானே நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும் எனவும், கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பரோல் கேட்டு கொடுக்கப்பட்ட மனுவை வேலூர் சிறை நிர்வாகம் பரிசீலிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாரயணன் மற்றும் நிர்மல்குமார் அடங்கிய அமர்வு, நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக் கோரிய மனுவுக்கு ஜூன் 11-ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. 

தொடர்ந்து, அவசரமாக பரோல் தேவைப்பட்டால் விடுமுறைகால நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் வழக்கின் அடுத்த விசாரணையை ஜூன் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

---ராஜீவ் காந்தி கொலை வழக்கு---

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் ஆகிய 7 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள அவர்களை விடுவிக்க அன்றைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முடிவு செய்ததை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றம் சென்றிருந்தது.

இந்த வழக்கில் கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 6-ஆம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைக்கலாம் என உத்தரவிட்டது. உடனடியாக, தமிழக அமைச்சரவைக் கூடி, அரசியல் சட்டம் 161-வது பிரிவின்கீழ் 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்து தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்தது. எனினும் தமிழக அரசின் பரிந்துரை மீது ஆளுநர் இதுவரை முடிவெடுக்கவில்லை.

இந்நிலையில் தற்போது லண்டனில் வசிக்கும் தனது மகள் ஹரிதாவுக்கு திருமண ஏற்பாடுகள் செய்ய 6 மாதம் பரோல் வழங்க வேண்டும் என்று நளினி கோரிக்கை வைத்துள்ளார்.