சிவயாத்திரை - அகந்தை அகற்றும் அளவில்லா சிவபக்தி!

சென்னை, நாகர்கோயில் உள்ளிட்ட தொலைவான ஊர்களிலிருந்தும்கூட கோவை ஈஷாவில் நடக்கும் மஹாசிவராத்தியில் கலந்துகொள்ள பாதயாத்திரையாக நடந்தே வருகின்றனர். 

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 20, 2024, 04:44 PM IST
  • தென்கைலாய பக்திப் பேரவை ஒவ்வொரு வருடமும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி ரத யாத்திரையை நடத்துகிறது.
  • இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கிறார்கள்.
  • பக்தர்கள் 42 நாட்கள் விரதமிருந்து தென் கயிலாயம் என்றழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலைக்கு யாத்திரை செல்கின்றனர்.
சிவயாத்திரை - அகந்தை அகற்றும் அளவில்லா சிவபக்தி! title=

ஒரு மனிதன் தன்னையும் தனது தேவைகளையும் முன்னிலைப்படுத்தாமல் சரணடையும் இடம்தான் பக்தி. எம்மதமாயினும், கலாச்சாரமாயினும் பக்தி என்பது எல்லா மனிதர்களையும் கரைக்கும் தீ. நமது கலாச்சாரத்தின் சிவபக்தி என்பது பாரதத்தின் கடைக்கோடி கிராமங்களின் எளிமையான மனிதர்களிடம் கூட சகஜமாக காணமுடியும். ஆனால் காலமாற்றத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போகும் பல புனிதங்களில் பக்தியும் ஒன்று என நாம் வருந்தும் இந்த சூழலில், பக்தி என்பது இப்போதும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது என்பதை இந்த பக்தர் கூட்டத்திடம் கண்கூடாகக் காணமுடிகிறது.

தென்கைலாய பக்திப் பேரவை ஒவ்வொரு வருடமும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி ரத யாத்திரையை நடத்துகிறது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களின் வயது, பாலினம், பணி மற்றும் பொருளாதார சூழ்நிலை என அனைத்தையும் கடந்து சிவனின் அருள் பெற, 42 நாட்கள் விரதமிருந்து தென் கயிலாயம் என்றழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலைக்கு யாத்திரை செல்கின்றனர். ஒவ்வொரு மாத சிவராத்திரிக்கும் இந்த யாத்திரை நடைபெற்றாலும், வருடத்தில் ஒருமுறை வரும் மஹாசிவராத்திரியின் போது இந்த சிவாங்கா யாத்திரை, ஆதியோகி ரத யாத்திரையோடு இணைந்து மிக விமரிசையாக நடைபெறுகிறது.

இதில் கலந்துகொள்ள பக்தர்கள் 42 நாட்களுக்கு முன்பே பதிவு செய்துகொண்டு தங்கள் விரதத்தை துவக்குகின்றனர். இருவேளை உணவு, சிவநமஸ்காரம் எனும் யோகப்பயிற்சி உள்ளிட்ட செயல்முறைகளோடு மிகத் தீவிரமான பக்தியில் இருக்கின்றனர். நாம் புராண கதைகளில் படித்த ஆழ்வார்கள் நாயன்மார்கள் போன்றோர் அவர்களது பக்திக்கு பெயர் போனவர்கள். கடவுள்களையே அவர்கள் முன் இறங்கி வரச்செய்யும் அளவிற்கான தீவிரமான பக்தர்களான ஆண்டாள், பூசலார் உள்ளிட்ட பலரை நாம் அவர்களை கடவுளாகவே பார்த்து வணங்கவும் செய்கிறோம்.

இந்த தலைமுறையினரான நாம் அத்தகைய தீவிரமான மனிதர்களை பற்றி படித்திருக்கலாம் அல்லது கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் நம் சமகாலத்தில் நம்மைப்போலவே சமூக வாழ்க்கையில் இருந்துகொண்டே அப்படிப்பட்ட தீவிரமான பக்தர்களாகவும் இருக்கிறார்கள் இந்த சிவாங்கா சாதகர்கள்.

மேலும் படிக்க | திமுக அரசுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற எடப்பாடி பழனிச்சாமி! பின்னணி தகவல்கள்...

இந்த தீவிரம் எந்த அளவிற்கெனில், சென்னை, நாகர்கோயில் உள்ளிட்ட தொலைவான ஊர்களிலிருந்தும்கூட கோவை ஈஷாவில் நடக்கும் மஹாசிவராத்தியில் கலந்துகொள்ள பாதயாத்திரையாக நடந்தே வருகின்றனர். அதிலும் அவர்கள் ஆதியோகி, நாயன்மார்களின் திருமேனிகள் கொண்ட ரதங்களை 500 கிலோ மீட்டர், 700 கிலோ மீட்டர் எனும் அசாத்திய தூரங்களை கடந்து இழுத்து வருகின்றனர். 

அவர்களும் அனைவரையும் போல பணி, தொழில் செய்பவர்கள்தான் எனினும், தங்களின் பக்தியின் தீவிரத்தால் உந்தப்பட்டு இப்படிப்பட்ட கடுமையான செயல்களையும் அன்பாக கசிந்துருகி செய்வது மிகுந்த வியப்பை தருகிறது. தன்னுடைய சுக சௌகரியங்கள் பலவற்றை சமரசம் செய்து கொண்டே இந்த யாத்திரையை அவர்கள் மேற்கொள்கிறார்கள். அவர்களின் பக்தியின் முன் அசௌகரியங்கள் ஏதும் ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை. நான் என்ற தன்மையை கொஞ்சம் நகர்த்தி விட்டு நமக்குள் இருக்கும் அகந்தையை அகற்ற இந்த அளவில்லா பக்தி உதவுகிறது.

ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவன் முதல் 64 வயதுள்ள பெரியவர் வரை பலரும் இந்த யாத்திரையில் கலந்துகொண்டு 20 நாட்களுக்கும் மேலாக பாத யாத்திரை மேற்கொண்டு இந்த தொலைதூரப்பயணத்தை அற்புதமாக நிறைவு செய்கின்றனர். நிறைவு செய்வதோடு நின்றுவிடாமல், 7 மலைத்தொடர்களையுடைய தென்கயிலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை ஏறி அங்குள்ள சுயம்புவாக வீற்றிருக்கும் ஈசனை கண்டுருகி மலை இறங்குகின்றனர். 

அதனைத்தொடர்ந்து மார்ச் 8 ஆம் தேதி சத்குரு அவர்களின் முன்னிலையில் நிகழும் மஹாசிவராத்திரி நிகழ்விலும் பங்கேற்கின்றனர். இந்த சாதகர்கள் தங்கள் உச்சகட்ட பக்தியின் தீவிரத்தில் தங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட பெருஞ்செயலை அனாசயமாக செய்வதை பார்கையில் அவர்கள் பக்தியின் வீச்சு எத்தனை அற்புதமானது என்பதை உணரமுடிகிறது.

மேலும் படிக்க | அம்மா பிறந்தநாள் கொண்டாட்டம்: தெருக்களை அலங்கரித்த கோலங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News