திமுக போட்ட அவதூறு வழக்கில் வைகோ விடுதலை: மதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது திமுகவின் முன்னாள் தலைவர் மறைந்த மு. கருணாநிதி அவர்கள் தொடர்ந்த அவதூறு வழக்கில் வைகோ விடுதலை.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 30, 2019, 12:33 PM IST
திமுக போட்ட அவதூறு வழக்கில் வைகோ விடுதலை: மதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி! title=

சென்னை: கடந்த 2006 ஆம் ஆண்டு ஆளும் கட்சியாக இருந்த திமுக அரசால் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த, இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில் வைகோவை விடுதலை செய்வதாக நீதிமன்றம் அறிவித்தது. 

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல்வராகஇருந்த திமுக தலைவரான மு.கருணாநிதி மதிமுக-வை உடைக்க முயற்சிப்பதாக, அப்பொழுது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிற்கு வைகோ கடிதம் எழுதியதாக பத்திரிகைகளில் செய்தியாக வெளியானது. அப்பொழுது இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது திமுகவின் முன்னாள் தலைவர் மறைந்த மு. கருணாநிதி அவர்கள் அவதூறு வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள எம்எல்ஏ-க்கள், எம்பி-க்கள் மீதான வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை நீதிபதி வழங்கினார். அந்த தீர்ப்பில், "வைகோ மீதான குற்றச்சாட்டுக்கு பத்திரிக்கை செய்தி ஆதாரம் மட்டுமே உள்ளதாகவும், இதைத் தவிர வேறு ஆதாரங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் வைகோவை விடுதலை செய்வதாக அறிவித்தார்.

Trending News