பிரதமர் மோடியின் தாரகமந்திரம் தவறான தகவல், பொய்ப் பிரசாரம் மட்டுமே: ஸ்டாலின் அட்டாக்

பாசிச பாஜக ஆட்சிக்கு முடிவுகட்ட, பாடம் புகட்ட அனைவரும் தயாராகுங்கள். தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு முன்னால் உறுதி ஏற்போம்! சபதம் ஏற்போம்! என அழைப்பு விடுத்த திமுக தலைவர் ஸ்டாலின்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 31, 2019, 01:55 PM IST
பிரதமர் மோடியின் தாரகமந்திரம் தவறான தகவல், பொய்ப் பிரசாரம் மட்டுமே: ஸ்டாலின் அட்டாக் title=

பாசிச பாஜக ஆட்சிக்கு முடிவுகட்ட, பாடம் புகட்ட அனைவரும் தயாராகுங்கள். தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு முன்னால் உறுதி ஏற்போம்! சபதம் ஏற்போம்! என அழைப்பு விடுத்த திமுக தலைவர் ஸ்டாலின்.

இதுக்குறித்து நேற்று ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற கலைஞர் சிலை திறந்து விழா நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் பேசியாதாவது:

கலைஞர் சிலையை திறந்து வைப்பதில் பெரும் மகிழ்ச்சி. அதேநேரத்தில் இதற்கிடையில் நமக்கு இன்னொரு போர்க்களம் ஒன்று காத்திருக்கின்றது. என்ன அந்த போர்க்களம்? தேர்தல் என்னும் போர்க்களம். நாடாளுமன்றத்தினுடைய தேர்தல் வரப்போகின்றது. அதேவேளையில் தமிழகத்தில் மொத்தம் 21 தொகுதிகளில் என மினி சட்டமன்ற நடக்க உள்ளது. 

நிச்சயமாக ஒரு மிகப்பெரிய வெற்றியை திராவிட முன்னேற்றக் கழகம் பெரும் என்பதில் மாற்றம் கிடையாது.

அதனால்தான் இப்பொழுது மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கக்கூடியவர்கள் எப்படியாவது மக்களை ஏமாற்றி திசை திருப்ப திட்டமிட்டு பல காரியங்களில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒன்று மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா. இப்பொழுது தேர்தல் வரப் போகின்றது ஒப்புக்கு ஒரு நாடகம் நடத்த அடிக்கல் நாட்டு நாடகம் நடந்திருக்கின்றது. நான்கரை ஆண்டுகாலம் என்ன ஆனது? இதற்கு பிரதமர் விளக்கம் சொல்ல வேண்டும் என்று நான் கேட்டேன்.

அவரிடமிருந்து விளக்கம் வரவில்லை. ஆனால் தமிழ்நாட்டின் பி.ஜே.பி தலைவராக இருக்கக்கூடிய சகோதரி தமிழிசை அவர்கள் பதில் சொன்னார். என்ன சொன்னார் தெரியுமா? மோடி தன்னுடைய ஆட்சியில் 13 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உருவாக்க முயற்சி செய்திருப்பதாக அவர் சொல்லியிருக்கின்றார். என்னுடைய கேள்வி 13 எய்ம்ஸ் மருத்துவமனை வரப்போகிறது என்று சொன்னீர்களே, இப்போது முயற்சி எடுத்திருப்பதாக சொல்கிறீர்களே, இதில் எத்தனை பயன்பாட்டிற்கு வந்திருக்கின்றது. இதை சொல்லக் கூடிய திராணி தமிழிசைக்கு இருக்கின்றதா? நான் கேட்கின்றேன்.

கடந்த 2014 தேர்தல் தமிழகத்துக்கு பிரச்சாரத்துக்கு வந்த மோடி கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றினாரா? இதே ஈரோட்டில் பேசிய மோடி மஞ்சள் உற்பத்தியாளர் வாழ்கையை பிரகாசம் ஆக்குவேன் என்றார். செய்தாரா? அவர்தான் பிரகாசமாகிக் கொண்டிருக்கிறார். சேலத்தில் பேசிய மோடி, இரும்பு உற்பத்தியை பெருக்குவேன் என்றார். பெருக்கினாரா? திருப்பூரில் பேசிய மோடி ஜவுளி உற்பத்திக்கு உறுதுணையாக இருப்பேன் என்றார் செய்தாரா? ராமநாதபுரம் சென்று மீனவர்களை காப்பாற்றுவேன். சிங்கள கடற்படையை உள்ளே வர விடாமல் தடுப்பேன் என்றார். நடந்ததா? கன்னியாகுமரியை சுற்றுலா தலம் ஆக்குவேன் என்றார். ஆக்கினாரா? இப்படி சொன்னது எதையுமே செய்யவில்லை. மக்களை ஏமாற்றி மோசடி செய்து வாக்குகளை வாங்கிவிட்டு மீண்டும் ஏமாற்ற வருகிறார் என்று சொன்னால் ஏன் அவர்களுக்கு கோபம் வருகிறது?

இவர்கள் சாதனை செய்யவில்லை. மக்களுக்கு வேதனைகளைத் தான் தந்தார்கள். அது என்னவென்று கேட்டால், பெட்ரோல் விலை உயர்வு, டீசல் விலை உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு, விலைவாசிகள் விலை உயர்வு, அனைத்து மானியங்களும் நீக்கம், புதிய வேலை வாய்ப்புகள் இல்லை, ஜிஎஸ்டி என்ற பெயரால் அநியாய வரி, கறுப்புப்பணத்தை மீட்கவில்லை, வாராக்கடன்கள் அதிகம் ஆனது. கோடிக்கணக்கில் கடன் பெற்றவர்கள் தப்பினார்கள், லோக்பால் செயல்படுத்தப்படவில்லை, ரபேல் பேரத்தில் கொள்ளை, கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களை பிரதமர் வந்து பார்க்கவரவில்லை. ஆனால் வெளிநாடு சுற்றுகிறார்.

நாடாளுமன்றம் வருவதில்லை. மாநிலங்களை மதிப்பதில்லை. உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்குள் மோதல், சிபிஐ அதிகாரிகளுக்குள் மோதல், ரிசர்வ் பேங்க்கை மதிக்கவில்லை. ஆகவே, வெறும் பேச்சு... பேச்சு...பேச்சு... அதுவும் வெட்டிப் பேச்சு. இதுதான் இன்றைய மத்திய அரசு. இதைத்தான் மோடி செய்து கொண்டிருக்கிறார்.

மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட மத்திய ஆட்சி இனியும் நீடிக்கலாமா? அதேபோல் ஊழல் நிறைந்திருக்கும் கொள்ளைக்கார ஏன் கொலைக்கார ஆட்சி தமிழகத்தில் இருக்கிறது. இதுவும் நீடிக்கலாமா? நான் கேட்கிறேன், இந்தியாவிலேயே இல்லையே உங்கள் பிரதமர்? எந்தக் கிழமையில் அவர் பிரதமராக இருந்திருக்கிறார். எல்லா நாட்களும் அவருக்கு விடுமுறை.

என்றைக்காவது பிரதமர் எதிர்க்கட்சிகள் கேட்கின்ற கேள்விக்கு நாடாளுமன்றத்தில் வந்து பதில் சொல்லியிருக்கிறாரா? எதைப்பற்றியும் கவலைப்படுவது கிடையாது. தவறான தகவலை, பொய்ப் பிரசாரத்தை மட்டும் தான் செய்து கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட ஆட்சி மத்தியில் இருக்கிறது. 

பாசிச பாஜக ஆட்சிக்கு முடிவுகட்ட, பாடம் புகட்ட அனைவரும் தயாராகுங்கள். தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு முன்னால் உறுதி ஏற்போம்! சபதம் ஏற்போம்!

இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாஜக-வை குறித்து சரமாரியாக தாக்கி பேசினார்.

Trending News