சென்னை: நீட் தேர்வு தரவரிசைப் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏன்? இதனால் மாணவ, மாணவியரும் பெற்றோர்களும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றார்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) சட்டமன்றத்தில் உரையாற்றி பேசினார். அவர் கூறியது,
நீட் தேர்வு தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி, மாநில உரிமைகளை எல்லாம் கொஞ்சம் கூட மதிக்காமல். சட்ட நடைமுறைகளுக்கு புறம்பாக வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டிருக்கின்றது. மாணவியர்கள் அதனால் தற்கொலை செய்துகொள்ளக்கூடிய நிலைமையும் ஏற்பட்டிருக்கின்றது. அதுபோல், அந்த மாணவிகளைப் பெற்றெடுத்திருக்கக்கூடிய பெற்றோர்களினுடைய மன அழுத்தம் அது ஒரு பக்கம் இருந்துகொண்டிருக்கின்றது.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்கவேண்டும் என்று இதே சட்டப் பேரவையில் 01-02-2017 அன்று ஏகமனதாக எல்லாக்கட்சிகளும் ஒருங்கிணைந்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பட்டிருக்கின்றது. இதனால் வரையில் 2 மசோதாக்கள் அனுப்பப்பட்டிருக்கின்றது.
ஆனால், மத்திய அரசு இதுவரையில் அதற்குரிய ஒப்புதலைத் தரவில்லை. அது மத்திய அரசின் அலமாரியில் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்கின்றது. தமிழக மாணவ, மாணவியர்களுடைய எதிர்கால நலனுக்கு எதிராக மத்தியரசு மேற்கொண்டிருக்கக்கூடிய இந்தப் பின்னணியில் 2019-20 ஆம் ஆண்டிற்கு மாணவ சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் 05-6-2019 அன்று வெளியிடப்பட்டு விட்டது. அதன் அடிப்படையில் தரவரிசைப்பட்டியல் தயார் செய்யப்பட்டு இந்நேரம் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனா, இதனால் வரையில் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படவில்லை.
என்னைப்பொறுத்தவரையில் நான் சொல்ல விரும்புவது, இது திட்டமிட்டு தாமதப்படுத்துவதற்கு ஒரு சதி இருக்கின்றது என்பதைத்தான் புரிந்துகொள்ள முடிகின்றது. இதனால் மாணவ, மாணவியரும் பெற்றோர்களும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றார்கள் என்பது மிகுந்த வேதனைக்குரிய ஒன்றாக அமைந்திருக்கின்றது. இவ்வாறு அவர் கூறினார்.