இலங்கை நாடாளுமன்ற கலைப்பு ஜனநாயக பச்சைப்படுகொலை: ஸ்டாலின்

"இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேன கலைத்திருப்பது ஜனநாயக பச்சைப்படுகொலை" என திமுக தலைவர் ஸ்டாலின் காட்டம்....

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 10, 2018, 12:59 PM IST
இலங்கை நாடாளுமன்ற கலைப்பு ஜனநாயக பச்சைப்படுகொலை: ஸ்டாலின்  title=

"இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேன கலைத்திருப்பது ஜனநாயக பச்சைப்படுகொலை" என திமுக தலைவர் ஸ்டாலின் காட்டம்....

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை பதவியிறக்கம் செய்த அதிபர் மைத்திரிபால சிறிசேன, கடந்த அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி, மகிந்தா ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். இதையடுத்து, இலங்கை நாட்டில் உள்நாட்டு அரசியல் குழப்பம் உச்சத்தை அடைந்தது. பதவியிறக்கம் செய்யப்பட்ட ரணில், தமக்கு பெரும்பான்மை இருப்பதாகவும் நாடாளுமன்றத்தைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டுமென வலியுறுத்தி வந்தார். 

225 எம்.பி.க்களில் 95 பேரின் ஆதரவு மட்டுமே ராஜபக்சேவுக்கு இருந்ததால், பெரும்பான்மையை நிரூபிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், நாடாளுமன்றத்தை முடக்கிய அதிபர் சிறிசேனா எதிர்க்கட்சி உறுப்பினர்களை சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதுடன், நவம்பர் 14 ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும் என்றும் அவர் அறிவித்தார். இதையடுத்து, இலங்கையில் அரசியல் குழப்பம் நீடித்து வந்த நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். 

இந்நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைக்கும் பிரகடனத்தில் அதிபர் சிறிசேனா நேற்று இரவு கையெழுத்திட்டார். ஜனவரி 5 ஆம் தேதி நாடு தழுவிய பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்றும், புதிய அரசு ஜனவரி 17 ஆம் தேதி பொறுப்பு ஏற்கும் என்றும் அரசாணையில் அவர் அறிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து, இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்தது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அந்த ட்விட்டர் பதிவில் "மோசமான அரசியல் சட்ட நெருக்கடியை உருவாக்கி இலங்கைத் தமிழர்களின் நலனுக்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், அதிபர் சிறிசேனா பாராளுமன்றத்தை கலைத்திருப்பது ஜனநாயகப் படுகொலை!... ஈழத்தமிழர்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். 

இனியும், மோடி அரசு மவுனம் காக்காமல் தமிழர்கள் நலன் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!" என குறிப்பிட்டுள்ளார். 

 

Trending News