மத்திய-மாநில அரசுகளுக்கு மு.க ஸ்டாலின் கோரிக்கை!!

Last Updated : May 31, 2017, 01:36 PM IST
மத்திய-மாநில அரசுகளுக்கு மு.க ஸ்டாலின் கோரிக்கை!! title=

ஓட்டல் விற்பனை வரி உயர்வு மற்றும் ஆன்லைன் மருந்து வர்த்தகம் ஆகியவற்றில் விரைந்து தீர்வு காண வேண்டும் என மத்திய-மாநில அரசுகளுக்கு மு.க ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுளா அறிக்கையில் கூறியதாவது:

மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி உயர்வைக் கண்டித்து தமிழகத்தில் உள்ள ஓட்டல்கள் அனைத்தும் இன்றைய தினம் மூடப்பட்டு புதிய சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள். 

ஓட்டல்களின் வியாபாரத்துக்கு ஏற்றவாறு 0.5 சதவீதமாக இருந்த வரியை, 5 சதவீதமாகவும் - அதிகபட்ச விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த 2 சதவீத வரியை 12 சதவீதமாகவும், ஏ.சி. வசதிகளுடன் கூடிய ஓட்டல்களுக்கு வரியை 18 சதவீதமாகவும் உயர்த்தியிருப்பதால் ஓட்டல் முதலாளிகள் மட்டுமின்றி, தொழிலாளிகள், வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்று தென் மாநிலங்களின் ஓட்டல் சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டல்களுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் அதிகப்படியாக பணம் கொடுத்து உணவு அருந்த வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதால் ஒவ்வொரு குடும்பத்தின் மாதாந்திர செலவும் அதிகரிக்கிறது. 

குறிப்பாக வெளியூர்களில் இருந்து வந்து தங்கிப் படிக்கும் மாணவ, மாணவிகள், ஐ.டி. நிறுவனங்களில் வேலை பார்க்கும் இளைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மாதந்தோறும் சாப்பாட்டு செலவும், தங்கும் ரூம் கட்டணமும் அதிகரித்து விடும் ஆபத்து உருவாகியிருக்கிறது. 

இப்போது திடீர் திடீர் என்று ஐ.டி. நிறுவனங்களில் வேலை இழப்பு ஏற்படுகிறது. பல இளைஞர்கள் வேலை தேடி அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  எஞ்சினியரிங் படித்தவர்களுக்குக் கூட மிகக்குறைந்த சம்பளமே கிடைக்கிறது.

இதுபோன்ற நெருக்கடிகளுக்கு இடையில் ஓட்டல்களின் விற்பனை வரியை 18 சதவீதம் வரை உயர்த்தியிருப்பது அதிகப்படியான செலவிற்கு வித்திடும். இதனால், அந்த இளைஞர்களின் வருவாயை நம்பியிருக்கும் குடும்பத்தினரின் பொருளாதார நிலை மிகவும் பாதிக்கும். அதேபோல், தங்கள் விவசாய நிலங்களைக் கூட அடகு வைத்து மேல்படிப்பிற்கு பிள்ளைகளை அனுப்பும் பெற்றோரின் கல்விச்செலவு சுமையை இது மேலும் அதிகரிக்கும். நலிவடைந்திருக்கும் ஓட்டல் தொழில் அடியோடு பாதிக்கும். 

லட்சக்கணக்கான ஓட்டல் தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் அபாயகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டங்களில் அதிமுக அரசின் சார்பில் நிதியமைச்சர் ஜெயக்குமார் அடிக்கடி பங்கேற்றார். சமீபத்தில் காஷ்மீரில் நடைபெற்ற கூட்டத்தில் கூட கலந்து கொண்டார். “அதிமுக அரசு விடுத்த கோரிக்கைகளை எல்லாம் ஏற்று மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தில் செய்த மாற்றங்களால் பல மாநிலங்களும் பலனடைந்துள்ளன” என்றெல்லாம் பகட்டாக பேட்டிகள் கொடுத்தார்.

ஆனால் லட்சக்கணக்கான ஓட்டல் தொழிலாளிகளும், மாணவர்களும், இளைஞர்களும், ஏன் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படும் இந்த கடுமையான வரி விதிப்பு பற்றி, ஆக்கபூர்வமான கருத்துக்களை எடுத்துவைத்து தீர்வு காண முயலவில்லை.

தமிழகத்தில் ஒன்றரை லட்சம் ஓட்டல்கள் பாதிக்கப்படுவதை மத்திய நிதியமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று, வரி விதிப்பு முறையில் அனைத்து தரப்பிற்கும் ஏற்றமுறையை கண்டறிய முற்படவில்லை. அனைத்து மாநில நிதியமைச்சர்களும் கலந்து கொண்ட ஜி.எஸ்.டி. பற்றிய ஆலோசனைக் கூட்டங்களில் இப்பிரச்சினைகளை முன்வைத்துத் தீர்வுகாண முயற்சிக்காத தமிழக நிதியமைச்சரின் அலட்சியப் போக்கால் இன்றைக்கு தமிழகத்தில் உள்ள ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட ஓட்டல்கள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க, அத்தியாவசியத் தேவை சட்டத்தின் கீழ் வரும் மருந்துகள் விற்பனையில், ஆன்லைன் மருத்துவ வணிகத்தை புகுத்துவதும், 3000 ரூபாய் இருந்த மருந்துக் கடை உரிமக் கட்டணத்தை 30 ஆயிரமாக உயர்த்தியிருப்ப தும் மருந்துக்கடை உரிமையாளர்களை மோசமாக பாதிக்கும். குறிப்பாக “ஆன்லைன் வர்த்தகம்” மூலம் மருந்து விற்பனை மனித உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று மருந்துக்கடை உரிமையாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்கள்.

எனவே, ஓட்டல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான வரி விதிப்பை குறைக்கவும், மருந்து வணிகத்தில் ஆன்லைன் வர்த்தகத்தை தடுக்கவும் மத்திய அரசிடம் மாநில அரசு உடனடியாக முறையிட வேண்டும். அதுமட்டு மின்றி அடுத்து நடைபெறும் ஜி.எஸ்.டி. ஆலோசனைக் கூட்டத்தில் ஓட்டல்க ளுக்கான கடுமையான வரி விதிப்பை குறைப்பதற்கு மத்திய நிதியமைச்சருக்கு உரிய அழுத்தம் தர வேண்டும்.

மத்திய அரசும் ஓட்டல்களுக்கு விதிக்கப்படும் வரியை குறைக்கவும், மருந்து வணிகத்தில் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யவும் நடவடிக்கை எடுத்து, ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் மருந்துக்கடை உரிமையாளர்கள் ஆகியோரின் கோரிக்கைகளை உரிய முறை யில் பரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Trending News