களத்தில் இறங்கிய சீமான்! தமிழக அரசின் செயலைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்று நமது எதிர்ப்பின் வலிமையை அரசிற்கு உணர்த்திட வேண்டுமாய் அறிவுறுத்துகிறேன் -சீமான் வேண்டுகோள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 10, 2021, 11:18 AM IST
களத்தில் இறங்கிய சீமான்! தமிழக அரசின் செயலைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் title=

சென்னை: முல்லைப்பெரியாறு அணையின் நீர் திறப்பு உரிமையை கேரளாவுக்குத் தாரை வார்த்த தமிழ்நாடு அரசின் செயலைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அழைப்பு விடுத்துள்ளார்.

அதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது..,

முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளதென்ற கேரள அரசின் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளுக்கு அடிபணிந்து, உச்சநீதிமன்றம் நிர்ணயித்த குறைந்தபட்ச நீர்மட்டமான 139.5 அடியை எட்டுவதற்கு முன்பாகவே, அணையின் நீர்மட்டம் 136 அடியாக இருந்தபோதே, அத்துமீறி நுழைந்து அணையைத் திறந்த கேரள அமைச்சர்களின் அடாவடிச் செயலைத் தடுக்கத்தவறி கைகட்டி வேடிக்கை பார்த்ததோடு மட்டுமல்லாமல், தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் அக்கொடுங்கோன்மைச் செயலை நியாயப்படுத்த முயலும் திமுக அரசின் கையாலாகத்தனத்தைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற ஞாயிற்றுக்கிழமையன்று (நவம்பர் 14) காலை 11 மணியளவில், தேனி பங்களாமேடு பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது.

155 அடிவரை கொள்ளளவு உடைய முல்லைப்பெரியாற்று அணையில் பல்வேறு சட்டப்போராட்டங்களுக்குப் பிறகு 142 அடிவரை மட்டுமே நிரப்புவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது. தற்போது அதனையும் காவு கொடுத்து 136 அடியாகக் குறைப்பதென்பது ஏறத்தாழ அணையின் மொத்த நீர் கொள்ளளவில் பாதியளவை மட்டுமே நிரப்ப வழிவகுப்பதோடு முல்லைப் பெரியாற்று பாசன வேளாண்மை முற்று முழுதாக அழியும் பேராபத்து ஏற்படும். 

ALSO READ | பிருத்விராஜ் மேல் வலுக்கும் எதிர்ப்பு! காரணம் என்ன?

எனவே பறிபோகும் தமிழ்நாட்டின் நதிநீர் உரிமையை மீட்டெடுக்கவும், உணவளித்து உயிர்காக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்று நமது எதிர்ப்பின் வலிமையை அரசிற்கு உணர்த்திட வேண்டுமாய் அறிவுறுத்துகிறேன்.

மக்கள் நலனை முன்வைத்து நடைபெறும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தை முல்லை பெரியாற்று பாசன விவசாயிகளின் சிக்கல் என்றோ, ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் சிக்கல் என்றோ சுருக்கி பார்க்காமல், தமிழ்நாட்டின் மிகமுக்கிய நதிநீர் உரிமையைப் பாதுகாக்க நடைபெறும் உரிமைப் போராட்டம் என்பதை கருத்திற்கொண்டு, விவசாயிகளும், சமூகச் செயற்பாட்டாளர்களும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்று, இப்போராட்டத்தை மாபெரும் வெற்றியடையச் செய்திட வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.

ALSO READ | முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது; வதந்தியை நம்ப வேண்டாம்: அமைச்சர் துரைமுருகன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News