தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு...
தூத்துக்குடியில் கடந்த மே மாதம் மே 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியதை எதிர்த்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான உத்தரவைப் பிறப்பித்தது தமிழக அரசு. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டற்கு எதிராக வேதாந்தா குழுமம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து அது விசாரணையில் இருந்து வருகிறது.
அந்த மனுவை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், சுற்றுசூழல் மாசு தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற மேகாலயா மாநில உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழுவை அமைத்து உத்தரவிட்டது.
அதன்படி, தருண் அகர்வால் குழுவினர் ஆய்வு செய்து கடந்த 26 ஆம் தேதி தங்களது அறிக்கையை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்திருந்தனர். அதில், தமிழக அரசின் உத்தரவு செல்லாது என்றும், ஆலையை மீண்டும் திறக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. இது தூத்துக்குடி மாவட்ட மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து இந்த வழக்கில் வேதாந்தா குழுமமும் ஆலையை திறக்க வேண்டும் என்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீது கடந்த வாரம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வாதம் நடைபெற்றது. இந்த வாதத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வைகோ வாதிட்டார். முடிவில், இந்த வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
வாதம் முடிந்து வெளியே வந்த வைகோ, 'ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் அ.தி.மு.க அரசும், மாசுகட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து செயல்பட்டு மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த வழக்கில் மக்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வராது' என்று தெரிவித்தார்.
இந்நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று சில நிபந்தனைகளுடன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா குழுமத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆலையை சுற்றியுள்ள பகுதியின் நிலத்தடி நீர் தன்மையை தொடர்ந்து கண்காணிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு. மேலும், ஆலை தொடர்பான புகார்களை தெரிவிக்க இணையதள வசதி செய்யவும் வேதாந்தா நிறுவனத்திற்கு உத்தரவு.