நிவர் புயல்; பாதிப்புகளை சரி செய்ய, நிவாரணம் வழங்க நடவடிக்கை தேவை: PMK

நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய, நிவாரணம் வழங்க நடவடிக்கை தேவை என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Last Updated : Nov 26, 2020, 12:08 PM IST
நிவர் புயல்; பாதிப்புகளை சரி செய்ய, நிவாரணம் வழங்க நடவடிக்கை தேவை: PMK

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை அச்சுறுத்திக் கொண்டிருந்த நிவர் புயல் வலு குறைந்து புதுச்சேரி அருகே இன்று அதிகாலை கரையை கடந்துள்ளது. எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கும், அச்சப்பட்ட அளவுக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை என்றாலும் கூட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுவையிலும் மக்களுக்கும், உழவர்களுக்கும் குறிப்பிடத்தக்க பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவான நாளில் இருந்தே புயலின் வேகம் தொடர்பாகவும், அதனால் ஏற்பட வாய்ப்புள்ள சேதங்கள் குறித்து பல்வேறு வகையான செய்திகள் வெளியாகி வந்தன. அத்தகைய செய்திகள் வெளியான நாளில் இருந்தே தமிழக அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. தமிழக அரசு, சென்னை வானிலை ஆய்வு மையம், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRFஉள்ளிட்ட அமைப்புகள் ஒருங்கிணைந்து போதிய முன்னெச்சரிக்கைகளை வெளியிட்டு வந்ததாலும், பாதிப்புகள் ஏற்படக்கூடிய பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதாலும் பெரிய அளவில் உயிரிழப்பு உள்ளிட்ட சேதங்கள் தவிர்க்கப்பட்டன. இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்ட, களப்பணிகளில் ஈடுபட்ட அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

ALSO READ | கரையை கடந்தது நிவர் புயல்: மழை நீடிக்கும் என IMD எச்சரிக்கை

அதேநேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் ஒரு சில இழப்புகளையும், பாதிப்புகளையும் மட்டும் தான் தடுக்க முடியும் அல்லது குறைக்க முடியும். அந்த வகையில் அரசு சிறப்பாக செயல்பட்டாலும்,  யாராலும் கட்டுப்படுத்த முடியாத இயற்கை பல இடங்களில் அதன் சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளை விட கடலூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மாவட்டம் முழுவதும் பல்லாயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. வாழை பயிர்கள் சூறாவளியில் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளன. விழுப்புரம் மற்றும் காவிரி பாசன மாவட்டங்களிலும் குறிப்பிடத்தக்க அளவில் இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. பாதிப்புகளை சரி செய்யவும், சரி செய்ய முடியாத பயிர் சேதங்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாகவும், காப்பீடு செய்யப்படாத பயிர்களுக்கு அரசு உதவிகள் மூலமாகவும் போதிய இழப்பீடுகளை பெற்றுத் தர வேண்டும்.

கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன. அவற்றை சீரமைக்கத் தேவையான உதவிகளை அரசு வழங்க வேண்டும். வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு தேவையான பொருளாதார உதவிகளையும் தமிழக அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

ALSO READ | நிவர் புயல்: நாகப்பட்டினத்தில் 45,000 க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்!

சென்னை மாநகரை நிவர் புயல் நேரடியாகத் தாக்கவில்லை என்றாலும் கூட, கடுமையான மழை மற்றும் பலத்தக் காற்று ஆகியவற்றால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சென்னையின் பல்வேறு பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் பல குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அந்த பகுதிகளில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் தரைத்தளத்தில் வாழும் மக்கள் ஏற்கனவே பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டாலும் கூட, மற்ற தளங்களில் வாழும் மக்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு, வெளியில் வர முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகளை வழங்கவும், அனைத்துப் பகுதிகளிலும் தேங்கியுள்ள வெள்ளநீரை வெளியேற்றவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் வேளச்சேரி, புறநகரில் தாம்பரம், முடிச்சூர், ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சிறிய அளவில் மழை பெய்தால் கூட வெள்ளம் ஏற்படுவது வாடிக்கையாகி விட்ட நிலையில், அங்கு வெள்ள நீர் வடிகால்களை புதிதாக அமைத்து நீர் தேங்குவதை தடுக்க முடியுமா? என்பது குறித்து வல்லுனர் குழுவை அமைத்து தமிழக அரசு ஆராய வேண்டும்.

புதுவையிலும் நிவர் புயல் (Nivar Cylone) பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. புயல் சேதங்களை கணக்கிட்டு நிவாரணம் வழங்கவும், தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றவும் புதுவை (Puducherryஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை- புறநகர் பகுதிகள், கடலூர் மாவட்டம் மற்றும் புதுவையில் புயல் மற்றும் மழையால் பாதிக்கப் பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கி உதவும்படி பாட்டாளி மக்கள் கட்சியினரை அறிவுறுத்துகிறேன். மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் அரசு  மீட்புக் குழுவினர் வரும் வரை காத்திருக்காமல், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மழை நீரை வெளியேற்றும் பணிகளிலும் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

ALSO READ | நகர்ந்தது நிவர்: புயலை திடமாக எதிர்கொண்டு நிமிர்ந்தது தமிழகம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News