‘கூத்தாண்டவர் கோவில் திருவிழா’ - சிறப்பாக நடத்திமுடிக்க ஆலோசனை

உலகப் புகழ்ப்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பிறகு கோலாகலமாக வரும் 5ம் தேதி தொடங்குகிறது.   

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Mar 27, 2022, 01:35 PM IST
  • கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா ஏப்.5ம் தேதி தொடக்கம்
  • விழாவை சிறப்பாக நடத்திமுடிக்க உளுந்தூர்பேட்டையில் ஆலோசனை
  • திருநங்கைகளுக்கு அனைத்து வசதிகளும் செய்துதர ஏற்பாடு
‘கூத்தாண்டவர் கோவில் திருவிழா’ - சிறப்பாக நடத்திமுடிக்க ஆலோசனை  title=

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் உலகப் புகழ்பெற்றக் கூத்தாண்டவர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பௌர்ணமி அன்று அரவான் களப்பலி திருவிழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கம். இந்த கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிற மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் திருநங்கைகள் அலைஅலையாக வந்துசேர்வர். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் திருவிழா தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பே திருநங்கைகள் கூவாகத்தில் கூடுவது வழக்கம். மகாபாரத புராணத்தில் வரும் குருச்சேத்திரப் போரை நினைவு கூறும் வகையில் 18 நாட்கள் இந்த திருவிழா நடைபெறுகிறது. 

மேலும் படிக்க | முதலமைச்சர் ஐயா நாங்க என்னபாவம் பண்ணினோம் ? கதறும் திருநங்கைகள்..!

விழாவின் சிகர நிகழ்ச்சி சித்திரா பவுர்ணமி அன்று நடைபெறுவதால் அன்று மட்டும் கட்டுக்கடங்காத கூட்டம் கூவாகத்தில் குவியும். அந்த நாளில், கூத்தாண்டவராகிய அரவானைக் கணவனாக நினைத்துக் கொண்டு, திருநங்கைகள் கோவில் அர்ச்சகர் கையால் தாலி கட்டிக் கொள்வார்கள். அன்று இரவு முழுவதும் ஆட்டம், பாட்டம் என்று கோவில் திருவிழா களைகட்டும்.

Image Of Koovagam festival

மறுநாள் பொழுது விடிந்ததும் அலங்கரிக்கப்பட்ட தேரில் அரவான் சிற்பம், கூத்தாண்டவர் கோவிலில் இருந்து நான்கு கி.மீ தூரத்தில் உள்ள கொலைக் களமான அமுத களம் கொண்டு செல்லப்படும். அங்குதான் அரவான் தலை துண்டிக்கப்படுகிறது. 

மேலும் படிக்க |பாலியல் தொழிலை விட்டுடுங்க -  திருநங்கைகளுக்கு காவல்துறை வேண்டுகோள்!

உயிரைவிடும் அரவானை நோக்கி கோயிலில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்துக்கும் திருநங்கைகள் ஒப்பாரி வைத்தபடி அமுதகளம் நோக்கிச் செல்வார்கள். முந்தைய இரவு ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் திளைத்த திருநங்கைகள், மறுநாள் காலையில் துயரத்துக்கு மாறுவர். திருநங்கைகள் அனைவரும் நேற்றிரவு கட்டிக்கொண்ட தாலியை அறுத்து, பூ எடுத்து, வளையல் உடைத்து பின் வெள்ளைப் புடவை உடுத்தி விதவை கோலம் பூணும் நிகழ்வுடன் விழா நிறைவு பெறுகிறது.

​Image Of Koovagam festival​

திருநங்கைகளின் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் விதமாகவும், அவர்களின் கலைகளை வெளிப்படுத்தும் விழாவாகவும் இந்த திருவிழா மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க |கட்டாய வழிப்பறி செய்தால் குண்டர் சட்டம்! திருநங்கைகளுக்கு எஸ்.பி எச்சரிக்கை!

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக குறைந்த அளவிலான பக்தர்களோடு நடைபெற்ற திருவிழா இந்த ஆண்டு வெகுவிமர்சையாக நடத்தப்படுகிறது. இந்தாண்டு கூத்தாண்டவர் கோவிலின் சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை என மொத்தம் 18 நாட்கள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி ஏப்ரல் 19ம் தேதி தொடங்குகிறது. தேர்த்திருவிழா மறுநாள் 20ஆம் தேதி நடைபெறுகிறது. இவ்விழாவிற்காக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் உளுந்தூர்பேட்டை, விழுப்புரம்,சென்னை, விருத்தாசலம், கடலூர் உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கூவாகம் தவிர உளுந்தூர்பேட்டை முழுக்க போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு திருவிழா நடைபெறுவதால் இந்தாண்டு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், திருவிழாவை அமைதியான முறையில் நடத்த உள்ளூர் மக்கள் மற்றும் உளுந்தூர்பேட்டை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

மேலும் படிக்க |Biggboss 5: பிக்பாஸ் நிகழ்ச்சியில் திருநங்கை நமீதாவின் கண்ணீரும், கலைஞர் கருணாநிதியும்

திருவிழா முடிந்து மீண்டும் சொந்த ஊருக்கு செல்லும் வரை அந்த பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையிலும், தீயணைப்புத் துறை, மருத்துவத்துறை, போக்குவரத்து வசதி, அடிப்படை வசதிகள் என பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

​Image Of Koovagam festival​

வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உள்ளூர் கிராம பிரதிநிதிகள், பஞ்சாயத்து தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்தாண்டு அமைதியான முறையில் திருவிழா நடத்திமுடிக்கப்படும் என அவர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News