ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை - சட்டமசோதா நிறைவேற்றம்; முழுவிவரம்

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

Written by - க. விக்ரம் | Last Updated : Oct 19, 2022, 02:40 PM IST
  • ஆன்லைன் ரம்மியால் பல உயிரிழப்புகள்
  • இன்று அதனை தடை செய்து சட்டமசோதா நிறைவேற்றம்
  • சட்டத்துறை அமைச்சர் தாக்கல் செய்தார்
 ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை - சட்டமசோதா நிறைவேற்றம்; முழுவிவரம்

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்து வங்கி ஊழியர் முதல் சாமானியர்கள்வரை தங்களது உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். நேற்று திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்துகொண்டார். இப்படி தொடர்ச்சியாக மரணங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இதற்கிடையே இந்த விளையாட்டை தடை செய்யக்கோரி தமிழ்நாடு அரசிடம்  பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வலுத்தன.

இதனைத் தொடர்ந்து, ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டம் செம்மைப்படுத்தப்பட்டு, கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இந்த அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மேலும், இந்த அவசர சட்டத்திற்கு தமிழ்நாடு ஆளுநரிடம் ஒப்புதல் பெறப்பட்டு, விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது. அதன்படி, ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு இயற்றிய அவசர சட்டம் ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அந்த அவசர சட்டத்துக்கு  தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 7ஆம் தேதி ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில் இன்று கூடிய தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதுதொடர்பான சட்ட மசோதாவை இன்று தாக்கல் செய்தார். இந்த மசோதாவானது குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

MK Stalin

இச்சட்டத்தின்படி, ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபடுவோருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஊடகங்களிலும், செயலிகளிலும் இதுதொடர்பான விளபங்களை வெளியிட தடை விதிக்கப்படுகிறது. மேலும், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களை கண்காணிக்கவும், விதிமுறைகளை மீறினால் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கவும் ஆன்லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படவுள்ளது.

முன்னதாக, ஆன்லைன் ரம்மியின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. அக்குழுவில் ஐஐடி தொழில்நுட்ப வல்லுநரான டாக்டர் சங்கரராமன், சினேகா அமைப்பின் நிறுவனரும் உளவியலாளருமான டாக்டர் லட்சுமி விஜயகுமார், கூடுதல் டிஜிபி வினித் தேவ் வான்கடே ஆகியோர் இடம் பெற்றனர்.

மேலும் படிக்க | ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தீபாவளி பரிசு, அரசு தொடங்கிய சிறப்பு திட்டம்

தொடர்ந்து, நீதிபதி சந்துரு தலைமையிலான அந்த குழு, ஆன்லைன் விளையாட்டுகள் திறன்கள், அதனால் ஏற்படும் தீமைகள், ஏற்படும் நிதி இழப்பு என்னென்ன என்பது குறித்து ஆய்வு செய்தது மட்டுமில்லாமல், ஆன்லைன் விளையாட்டுகளில் பண பணப்பரிவர்த்தனை எந்தளவு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டது. ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதவை உருவாக்குவதற்கான காரணங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

More Stories

Trending News