விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுதும் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். திமுக செயல் தலைவர் ஸ்டாலின் திருவாரூரில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஏராளமான கட்சி தொண்டர்களுடன் பேரணியாக வந்த மு.க.ஸ்டாலின், மாவட்ட பஸ் ஸ்டாண்ட் முன் போராட்டம் நடத்தினார். மு.க.ஸ்டாலின் உட்பட ஆயிரக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர்.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆதவராக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதன்படி தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. முழு அடைப்பு போராட்டத்தில், அதிமுக, பாஜக, பாமக, தமாகா, தேமுதிக ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை.
காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்பட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகிய சங்கங்களும் தங்களது முழு ஆதரவை அளித்துள்ளன. இதனால், அனைத்து கடைகளும் மூடப்படும் என தெரிகிறது.
கைது செய்யப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி:-
விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டம் மிகப்பெரிய வெற்றி என திருவாரூரில் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திருவாரூரில் என்னையும் மற்ற தலைவர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். எங்களை 4 கிலோ மீட்டர் நடக்க வைத்ததால் மிகப்பெரிய பேரணியே நடந்து விட்டது என்று அவர் தகவல் தெரிவித்துள்ளார். வங்கிக் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்வதில்லை என்று தவறான தகவலை கூறியிருக்கிறார்.
வி.பி.சிங் பிரதமராக இருந்த போது விவசாயிகளின் வங்கிக்கடன் 10,000 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. விவசாயிகளின் வங்கிக்கடனை ரத்து செய்யாவிட்டால் மீண்டும் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என மு.க.ஸ்டாலின் கூறினார்.
மேலும் அதிமுக அரசு குடிநீர் பிரச்சனையை தீர்க்காமல் மதுக்கடையைத் திறக்க ஆர்வம் காட்டுகிறது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
முதல்வர் பதவிக்குரிய தகுதி, திறமை பழனிசாமிக்கு இல்லை என எதிர்க்கட்சித் தலைவருமான திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.