பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.8 மற்றும் டீசல் மீதான கலால் வரி ரூ.6 குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். இதனால் நாடு முழுவதும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் 50 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைந்து விற்பனையாகி வருகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பெட்ரோல், டீசல் மீதான வரியை பல முறை உயர்த்தியபோது மாநில அரசுகளிடம் கலந்தாலோசிக்காத மத்திய அரசு, தற்போது விலையை குறைத்துவிட்டு மாநில அரசுகளும் அவ்வாறு செய்ய வேண்டும் என கூறுவது நியாயம் இல்லை என கூறினார்.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ''நாட்டு மக்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி மிக முக்கியமான 3 முடிவுகளை நேற்று எடுத்தார். இதில் முக்கியமானது பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு மீண்டும் குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. பெட்ரோல் விலை ரூ.9.50 மற்றும் டீசல் விலை ரூ.7 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெட்ரோல் விலை ரூ.10 மற்றும் டீசல் விலை ரூ.5 குறைக்கப்பட்டது. எனவே, கடந்த 6 மாத காலத்தில் மட்டும் பெட்ரோல் விலையில் ரூ.14.50 மற்றும் டீசல் விலையில் ரூ.12 மத்திய அரசு குறைத்துள்ளது.
2014-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி முடியும் தருவாயில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை இந்திய மதிப்பில் ரூ.6376 ஆக இருந்தது. ஆனால் தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை ரூ.7800 ஆக விற்பனை ஆகிறது. இப்படியாக ஒரு பக்கம் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்தாலும் நாட்டு மக்களுக்காக பிரதமர் மோடி எரிபொருட்களின் விலையை குறைத்து அறிவித்துள்ளார்.
இதனால் மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து பத்தாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டாலும் பொதுமக்களின் நலன் கருதி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் எனும் வாக்குறுதியை அளிக்காமலேயே மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆனால் தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை ரூ.5 மற்றும் டீசல் விலை ரூ.4 குறைக்கப்படும் என அறிவித்த திமுக அரசு அதனை செயல்படுத்தவில்லை.
இதுகுறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது விலையை குறைப்போம் என சொன்னோம், ஆனால் எப்போது குறைப்போம் என்று சொன்னோமா? என விதண்டாவாதமான வாதத்தை முன்வைத்தார். அருகாமையில் உள்ள புதுச்சேரி, கேரளா மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலையை அம்மாநில அரசுகள் குறைத்துள்ளன.
எனவே, தேர்தல் அறிக்கையில் கூறியபடி அடுத்த 72 மணி நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை என்றால் பாஜக சார்பில் கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.''
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.
மேலும் படிக்க | திருமண பரிசாக வழங்கப்பட்ட தக்காளி மற்றும் விறகடுப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR