மக்களவை தேர்தல் 2019 (லோக் சபா தேர்தல் 2019) முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 11) காலை ஏழு மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 20 மாநிலங்களில் 91 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நான்கு மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலும் நடைபெறுகிறது.
நாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும், அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
39 தொகுதிக்கான மக்களவை தேர்தலுடன் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 22 சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. அதில் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 39 தொகுதிக்கான மக்களவை தேர்தலுடன் 18 சட்டசபை தொகுதிக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. மீதமுள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கு வரும் மே 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
இதனையடுத்து தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தேசிய கட்சி தலைவர்களான பிரதமர் மோடி, அமித் ஷா, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உட்பட பலர் தமிழக தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க்க உள்ளனர்.
தமிழகத்தில் பிரச்சாரம் செய்வதற்க்காக பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி மதுரை விமான நிலையம் வர உள்ளனர். இதனையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.