மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதி வாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் -ராமதாஸ் கோரிக்கை

தேசிய அளவிலும், மாநில அளவிலும் இட ஒதுக்கீட்டிற்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள்  ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும், (Supreme court) பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 28, 2021, 04:20 PM IST
மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதி வாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் -ராமதாஸ் கோரிக்கை title=

சென்னை: பா.ம.க நிறுவனர் ராமதாஸ் (Ramadass) 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதி வாரியான கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு (Narendra modi) இன்று கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் மேலும் கூறியதாவது : "பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் புதிய சாதிகளைச் சேர்க்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்று மராத்தா இட ஒதுக்கீட்டு (Maratha Reservation) வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால் பறிக்கப்பட்ட மாநில அரசுகளின் சமூகநீதி உரிமையை மீண்டும் நிலைநாட்டும் வகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 127 ஆவது திருத்தத்தை செய்யும் அரசியல் சட்டத்திருத்த முன்வடிவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியதற்காக உங்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல், இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உண்மையான சமூகநீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து தங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இந்தக் கடிதத்தை தங்களுக்கு நான் எழுதுகிறேன். தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது தான் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கையாகும். அதற்கான தேவை அதிகரித்துள்ளது.

மத்திய அரசின் முதன்மையான நோக்கங்களில் ஒன்று உள்ளடக்கிய வளர்ச்சி ஆகும். இந்தியா  விடுதலையடைந்து 75 ஆண்டுகள் ஆகும் நிலையில், பல்வேறு துறைகளில் வியக்கத்தக்க வளர்ச்சியை அடைந்திருக்கிறது. ஆனால், அந்த வளர்ச்சியின் பயன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைந்திருக்கின்றனவா? என்றால் இல்லை என்பது தான் உண்மை ஆகும். அதனால் தான் "இந்தியாவில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வருகின்றன.  அதற்கான காரணங்களில் ஒன்று வளர்ச்சியால் கிடைக்கும் பயன்களை அனுபவிக்கும் அளவுக்கு சமூகத்தில் பின்தங்கிய மக்களால் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட உரிமைகளை பெற முடியவில்லை. இந்த நிலையைப்  போக்கி அனைவருக்கும் கல்வியும், வேலைவாய்ப்பும் கிடைக்கச் செய்வதற்கான கருவி தான் இட ஒதுக்கீடு (Reservation)எனும் சமூகநீதி நடவடிக்கையாகும். இந்தியாவில் தேசிய அளவிலும், மாநிலங்களிலும் சமூக அளவிலான மக்கள்தொகை அடிப்படையில் குறிப்பிட்ட அளவு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

ஆனால், தேசிய அளவிலும், மாநில அளவிலும் இட ஒதுக்கீட்டிற்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள்  ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும், (Supreme court) பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இட ஒதுக்கீட்டின் நியாயத்தை உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் நிருபிக்க சாதிவாரி மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் தேவை. ஆனால், நம்மிடம் அது இல்லை. "இந்தியா விடுதலை அடைந்த பிறகு இதுவரை வழங்கப்பட்ட எந்தவொரு எந்தவொரு இட ஒதுக்கீடும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் வழங்கப் படவில்லை. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளை எதிர்கொள்ள சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அவசியமாகும். இதை பல்வேறு தருணங்களில் உச்சநீதிமன்றமும், பல்வேறு மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களும் வலியுறுத்தியுள்ளன.

"சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை கடந்த காலங்களில் பலமுறை எழுப்பப்பட்டிருக்கிறது. மத்திய அரசும் (Central government) அதை கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டுள்ளது. கடந்த 2011&ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆக நடத்த அப்போதைய அரசு ஒப்புக் கொண்டது. ஆனால், அது சாதி, சமூக, பொருளாதார கணக்கெடுப்பாக மாற்றப்பட்டது. அதன் விவரங்களும் கூட இன்று வரை வெளியிடப்படவில்லை.

இந்தியாவில் 1931&ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 90 ஆண்டுகளாக நடத்தப்படாத சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை இந்த முறையாவது நடத்துவதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும். "கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஏற்கனவே தாமதமாகி விட்ட நிலையில், அதற்கான கட்டமைப்புகளில் சாதிவாரியாக மக்கள்தொகையை கணக்கெடுப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து, அதனடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதை செய்வது கடினமான ஒன்றல்ல... மத்திய அரசு நினைத்தால் சாத்தியமாகும்.

"மராத்தா இட ஒதுக்கீட்டு வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் புதிய சாதிகளை சேர்ப்பதற்கான அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என்று ஆணையிட்டது. அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை களையும் வகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மத்திய அரசு அண்மையில் திருத்தியது. அதேபோல், "சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பையும் மேற்கொள்ள சமூகநீதி கண்ணோட்டத்துடன் அரசு ஆணையிட வேண்டும்.

"சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதை இந்தியாவின் பெரும்பான்மையான தேசியக் கட்சிகளும்,  மாநிலக் கட்சிகளும் ஆதரிக்கின்றன. "எனவே, 2021&ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்துவதற்கான வரலாற்று சிறப்பு மிக்க ஆணையை பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் பிரதிநிதியாக இந்தியாவின் பிரதமர் பதவியை அலங்கரிக்கும் தாங்கள் பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.இவ்வாறு பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News