Medical education: அகில இந்திய தொகுப்பில் OBC ஒதுக்கீட்டில் தாமதம் வேண்டாம்

மருத்துவக்கல்வியில் அகில இந்திய தொகுப்பில் ஓ.பி.சி ஒதுக்கீட்டை தாமதிக்கக் கூடாது என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை விடுத்துள்ளார்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 25, 2021, 11:13 AM IST
  • அகில இந்திய தொகுப்பில் ஓ.பி.சி ஒதுக்கீட்டை தாமதிக்கக் கூடாது
  • தமிழ்நாட்டில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல்
  • ஆனால் அதை தாமதப்படுத்தும் நோக்கம் இருபபதாக சந்தேகம் எழுகிறது
Medical education: அகில இந்திய தொகுப்பில் OBC ஒதுக்கீட்டில் தாமதம் வேண்டாம்  title=

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு மருத்துவக் கல்வியில் ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக அறிக்கை விடுத்துள்ளார். அகில இந்திய தொகுப்பில் ஓ.பி.சி ஒதுக்கீட்டை தாமதிக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார். அந்த அறிக்கை விவரம் பின்வருமாறு: 

”மருத்துவக் கல்விக்கான அகில இந்தியத் தொகுப்பில் தமிழ்நாட்டில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு  இட ஒதுக்கீடு வழங்கத் தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. ஆனால், அதற்காக மத்திய அரசு முன்வைத்திருக்கும் நிபந்தனை, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை விட, அதை தாமதப்படுத்தும் நோக்கம் கொண்டதாகவே தோன்றுகிறது. இது சிறிதும் நியாயமற்றதாகும்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றில் மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், ‘‘ மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையில், தமிழ்நாட்டுக்கான இடங்களைப் பொருத்தவரை பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனாலும், இது குறித்த முடிவை, உச்சநீதிமன்றத்தில் சலோனிகுமார் வழக்கில் தெரிவித்து விட்டு, அதன் பிறகு தான் பிற பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை செயல்படுத்த முடியும்’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது போகாத ஊருக்கு வழிகாட்டுவதற்கு ஒப்பான செயலாகும்.

Also Read | OBC இட ஒதுக்கீடு மீண்டும் மறுக்கப்படுவது மாபெரும் அநீதி - PMK

அகில இந்திய தொகுப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு அனுமதி பெறவோ, தகவல் தெரிவிக்கவோ எந்த தேவையும்  இல்லை. ஏனெனில், மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசு இட ஒதுக்கீட்டின்படியோ, மாநில அரசு இட ஒதுக்கீட்டின்படியோ இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என்று கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27&ஆம் தேதி தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் அதற்காக கடைபிடிக்கப்பட வேண்டிய வழிமுறைகளையும் மிகவும் தெளிவாக வகுத்துக் கொடுத்துவிட்டது.

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அதன் இளைஞரணித் தலைவரும், மத்திய சுகாதாரத்துறையின் முன்னாள் அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தொடர்ந்த வழக்கில் அளித்த தீர்ப்பில்,‘‘மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை. இட ஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் என எந்த கட்டாயமும் இல்லை. மத்திய அரசே இட ஒதுக்கீடு தொடர்பாக முடிவெடுக்கலாம். இது குறித்து முடிவெடுக்க ஒரு குழுவை அமைத்து, அதன் பரிந்துரைப்படி அடுத்த கல்வியாண்டு முதல் ஓபிசி இட ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கலாம்’’ என்று ஆணையிட்டிருந்தது.

அதன்படி அமைக்கப்பட்ட மத்திய, மாநில அரசுகளின் மருத்துவக் கல்வி தொடர்பான 5 அதிகாரிகளைக் கொண்ட குழு கடந்த 21.10.2020 அன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செயலாளரிடம் தாக்கல் செய்த பரிந்துரை அறிக்கையில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு  இடஒதுக்கீடு வழங்குவது சாத்தியமானது தான் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Also Read | PMK: வன்னியர் இட ஒதுக்கீடுச் சட்டம் நிரந்தரமானது: அதை நீக்க முடியாது!

‘‘தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ளவாறு 50% அல்லது தேசிய அளவில் உள்ளவாறு 27% என எந்த அளவில் வேண்டுமானாலும் இட ஒதுக்கீடு வழங்கலாம்; ஆனால், அதற்காக நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்; அகில இந்திய தொகுப்பில் பொதுப்பிரிவினருக்கான ஒதுக்கீடு குறையாத வகையில், எத்தனை விழுக்காடு ஓபிசிக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறதோ, அதற்கேற்ற அளவில் மொத்த இடங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்’’ என்றும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. மத்திய அரசு நினைத்திருந்தால் இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு  எப்போதோ ஓபிசி வகுப்புக்கு இட ஒதுக்கீடு வழங்கியிருக்கலாம். ஆனால், அதை மத்திய அரசு செய்யவில்லை.

அகில இந்திய தொகுப்பில் ஓபிசிக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து உச்சநீதிமன்றம் தான் முடிவு எடுக்க  வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதன் தீர்ப்பில் தெளிவாகக் கூறி விட்டது. அதுமட்டுமின்றி, அகில இந்திய தொகுப்பு இடங்களில் ஓபிசி வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று  கோரி பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்த போது, உச்சநீதிமன்றமே இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தியது.

அதன்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தான் ஓபிசி இட ஒதுக்கீடு வழங்கும்படி  ஆணையிடப்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் மீண்டும் உச்சநீதிமன்றத்தை இது தொடர்பாக அணுகுவது தேவையற்ற சிக்கலையும், காலதாமதத்தையும் ஏற்படுத்தும். அகில இந்திய தொகுப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கி, அது குறித்த விவரங்களை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டால் சலோனிகுமார் வழக்கே இல்லாமல் போய்விடும். அது தான் சரியான தீர்வாக இருக்கும். அதை விடுத்து உச்சநீதிமன்றத்தின் அனுமதி பெற்று தான் ஓபிசி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பது நீதியாக இருக்காது.

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு உருவாக்கப்பட்டு 35 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு இன்னும் மறுக்கப்படுவது நியாயமற்றது. எனவே, 5 உறுப்பினர்கள் குழுவின் பரிந்துரை அடிப்படையில், கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பன போன்ற எந்த நிபந்தனைகளும் இல்லாமல் அகில இந்தியத் தொகுப்பில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதற்கான சட்டம் வரும் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, நடப்புக் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று பாமக நிறுவகத் தலைவர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Also Read | PMK: வன்னியர் இட ஒதுக்கீடுச் சட்டம் நிரந்தரமானது: அதை நீக்க முடியாது!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News