டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரம் இருந்த டாஸ்மாக் மதுபானக் கடைகள், மதுக்கூடங்கள் மூடப்பட்டன. இதற்கு பதிலாக மாற்று டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெர்வித்து தமிழகத் தின் பல பகுதிகளிலும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சாமளாபுரத்தில் நெடுஞ்சாலையோரம் இருந்த 3 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. அதற்குப் பதிலாக, புதிய மதுக்கடை அமைக்கும் பணி நடந்து வந்தது. இதையறிந்த பொது மக்கள் சோமனூர் - காரணம் பேட்டை சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். சூலூர் எம்எல்ஏ கனகராஜும் மக்களின் கோரிக்கையை ஏற்று போராட்டக் களத்துக்கு வந்தார். சுமார் 9 மணி நேரம் போராட்டம் நடந்தும், அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்துக்கு வரவில்லை.
திடீரென மாலை வந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுப்பட்ட அனைவரையும் கலைந்து செல்லுமாறு உத்தரவிட்டனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸாரும், அதிரடிப் படையினரும் திடீரென தடியடி நடத்தினர். போலீஸார் கண்மூடித்தனமாக தாக்கியதில் 3 பெண்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
திருப்பூர் அருகே சாமளாபுரம் அய்யன்கோயில் சாலையில், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது ஏடிஎஸ்பி நடத்திய தாக்குதலை கண்டித்து, காலவரையற்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை போராட்டக்காரர்கள் நேற்று மாலை தொடங்கினர்.
திருப்பூர் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் ஓங்கி அறைந்ததில் அய்யம் பாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண் பலத்த காயமடைந்தார். சாமளாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல், போலீஸார் தடியடி நடத்தியதில் தலையில் பலத்த காயமடைந்த சாமளாபுரத்தைச் சேர்ந்த சிவகணேஷ் என்பவரும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தப் போராட்டத்தில் 10 பெண்கள் உட்பட சுமார் 30-க்கும் மேற்பட்டோர் போலீஸார் தடியடியில் படுகாயம் அடைந்தனர். அவர்களும் சிகிச்சை பெற்று வருவதாக பாதிக்கப் பட்டவர்கள் தெரிவித்தனர்.
ஏடிஎஸ்பி பாண்டியராஜன், தாக்குதலில் ஈடுபட்ட பல்லடம் டிஎஸ்பி மனோகரன், காவல் ஆய்வாளர் தங்கவேல் ஆகியோரை பணிநீக்கம் செய்ய வேண்டும். காயம்பட்ட வர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டம், திருவள்ளூர் மாவட்டம், கரூர் மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டம், கோவை மாவட்டம், வேதாரண்யம் போற்ற இடங்களில் டாஸ்மாக் கடை திறப்பதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.