கடந்த நவம்பர் 15-ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியை கஜா புயல் பலமாக தாக்கியது. அதில் தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் புதுச்சேரியின் பல பகுதிகள் மிக மோசமாக பாதிப்படைந்துள்ளது. கஜா புயலால் பாதிப்படைந்த பகுதிகளில், அம்மாநில அரசு சார்பில் நிவாரண பணிகள் மேற்கொண்டு வருகிறது.
மீட்பு, சீரமைப்பு, நிவாரணப் பணிகள் மேற்க்கொள்ள மத்திய அரசு சார்பில் நிவாரண நிதி வழங்க வேண்டும் என தமிழகம் மற்றும் புதுச்சேரி முதல்-அமைச்சர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனையடுத்து, இன்று காலை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், பிரதமர் மோடியை சந்தித்து, தமிழகத்திற்கு நிவாரண நிதியாக 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும், அதில் 1500 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
இதனையடுத்து, இன்று மாலை 4 மணி அளவில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை நேரில் சந்தித்து கஜா புயலால் புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள சேதங்களை எடுத்துரைக்க உள்ளார்.
முன்னதாக, மீட்பு, சீரமைப்பு, நிவாரணப் பணிகள் மேற்க்கொள்ள மத்திய அரசு சார்பில் நிவாரண நிதியாக 187 கோடி ரூபாயை வழங்க வேண்டும் என புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.