தமிழகத்தில் ஏஏஒய் அட்டைகள் தவிர மற்ற அட்டைதாரருக்கு மானிய விலையான சர்க்கரை கிலோவுக்கு ரூ.25 என்ற அளவில் வரும் 1-ம் தேதி முதல் விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது என தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் பிறப்பித்த அரசாணை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழகத்திற்கு மத்திய அரசு 10 ஆயிரத்து 833 மெட்ரிக் டன் சர்க்கரையை கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் வரை ஒதுக்கி வந்தது. இந்த சூழ்நிலையிலும் மாதத்துக்கு 37 ஆயிரத்து 163 மெட்ரிக் டன் சர்க்கரையை ரேஷன் கடைகள் மூலம் கிலோ ஒன்றுக்கு ரூ.13.50 என்ற விலைக்கு தமிழக அரசு வழங்கி வருகிறது.
இந்த நிலையில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை இந்தியா முழுவதும் மத்திய அரசு அமல்படுத்தியது. அந்த சட்டப்படி, வறுமை கோட்டுக்கு கீழ் வருபவர்கள் (பிபிஎல்), அந்த்யோதயா அன்ன யோஜனா (ஏஏஒய்) திட்ட பயனாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.
தற்போது மானிய விலையில் சர்க்கரை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்தது. அதன்படி, பொதுவினியோக திட்டம் மூலம் மானிய சர்க்கரையை ஏஏஒய் பிரிவினருக்கு மட்டுமே அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பிரிவில் வரும் குடும்பத்தினருக்கு ஒரு கிலோ சர்க்கரை ரேஷன் கடையில் வழங்கப்படும்.
மற்ற பிரிவினர்களுக்கு சந்தை விலையான கிலோ ஒன்றுக்கு ரூ.45 என்ற வீதத்தில் சர்க்கரையை தமிழக அரசு கொள்முதல் செய்கிறது. அவ்வளவு தொகைக்கு வாங்கினாலும் அதை ஏஏஒய் அட்டைகள் தவிர மற்ற அட்டைதாரருக்கு மானிய விலையான கிலோவுக்கு ரூ.25 என்ற அளவில் 1.11.17 முதல் விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வழங்க மாதத்துக்கு 33 ஆயிரத்து 636 மெட்ரிக் டன் சர்க்கரை கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்கு ஆண்டொன்றுக்கு ரூ.1,300 கோடி செலவாகிறது.
அதில் வரும் கூடுதல் சுமையான கிலோவுக்கு ரூ.20 என்ற தொகையை மாநில அரசே ஏற்றுக்கொள்ளும். அதனால் ரூ.836.29 கோடி அரசுக்கு கூடுதல் செலவாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.