ஜப்பான் கப்பலில் இந்தியர்களை உடனடியாக மீட்டு தாயகம் அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இராமதாசு கோரிக்கை!
சீனாவின் பரவி வரும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள வுஹான் நகரத்தில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. உலகம் முழுவதும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது.
இந்த வைரஸ் வவ்வால்களை உணவாக உண்ணும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம் பரவியிருக்கலாம் என கருதப்பட்ட நிலையில் முதலில் எறும்பு தின்னியிடம் இருந்துதான் பரவியிருக்க வேண்டும் என தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த 2002-2003 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சார்ஸ் வைரஸ் தாக்குதலில் 774 பேரைக் கொன்றது. சார்ஸ் வைரசால் பலியானோர் எண்ணிக்கையை விட கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையயே ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் உள்ள 3,700 பேரில் இதுவரை இந்தியர்கள் 2 பேர் உட்பட மொத்த் 174 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கப்பலில் உள்ள அனைவரையும் சோதனை செய்யும் உட்கட்டமைப்பு தங்களிடம் இல்லை என்று ஜப்பான் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் 6 தமிழர்கள் உட்பட சுமார் 100 இந்தியர்கள் கப்பலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தனது டிவிட்டர் பதிவுவில் கூறியதாவது.,
ஜப்பான் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசுக்கப்பலில் கொரோனா வைரஸ் பாதித்த பயணிகளின் எண்ணிக்கை 150-ஐ தாண்டி விட்டதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஜப்பான் கப்பலில் தமிழகத்தை சேர்ந்த 6 பேரும் தவித்து வருகின்றனர். அவர்களை கப்பல் நிர்வாகம் கவனித்துக் கொள்கிறது என்றாலும் கூட அவர்களையும் பிற இந்தியர்களையும் உடனடியாக மீட்டு தாயகம் அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.