மீனவர்களையும், அவரது படகுகளையும் மீட்க உறுதியான நடவடிக்கை தேவை: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

Updated: Jun 11, 2016, 10:24 AM IST
மீனவர்களையும், அவரது படகுகளையும் மீட்க உறுதியான நடவடிக்கை தேவை: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்
Photo:- Tamil Nadu CM Jayalalithaa File

மீன்பிடி தடைக்காலம் கடந்த மாதத்துடன் முடிந்தது அதனையடுத்து தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறார்கள். கடந்த 30-ம் தேதி மீன் பிடிக்கச்சென்ற ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரையும், இதேபோல் கடந்த 2-ம் தேதி மீன் பிடித்துக்கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் மீனவர்கள் 4 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அதன்பிறகு 4-ம் தேதி ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரும், 9-ம் தேதி 6 பேரும் என இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த 21 பேரையும் மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:-

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவம் மீண்டும் நடந்திருப்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். 

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடித் தளத்தில் இருந்து மீன் பிடிப்பதற்காக எந்திரப் படகில் சென்ற 6 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் ஜூன் 9-ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கை தலைமன்னாருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மிகுந்த வேதனை அளிக்கிறது:-

பாக் நீரிணைப் பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடித்து வந்த இடத்தில் தற்போது மீன்பிடிக்கும்போது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் அல்லது கடத்தப்படும் அச்சத்தை தமிழக மீனவர்கள் எதிர்கொள்வது மிகுந்த வேதனை அளிக்கிறது. சமீபத்தில் கைது செய்யப்பட்ட 15 மீனவர்கள் தற்போது இலங்கையில் இன்னும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கும்போது, அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகுகளை இலங்கை அரசு விடுவிப்பதில்லை. இலங்கை அரசின் இந்த நிலைப்பாடு, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாக உள்ளது. இதனால் தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலை குறித்து இலங்கை அரசின் உயர்மட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு நீங்கள் கொண்டு செல்லவேண்டும். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களும், அவர்களின் படகுகளும் உடனடியாக விடுவிக்கப்படுவதை நீங்கள் உறுதி செய்யவேண்டும்.

முடிவு பெறாத பிரச்னை:-  

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது தொடர்பான 1974 மற்றும் 1976-ம் ஆண்டு ஒப்பந்தங்கள் செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டில் நான் தொடர்ந்துள்ள வழக்கில் தமிழக அரசும் தன்னை இணைத்து கொண்டுள்ளது. எனவே இலங்கை, இந்தியாவுக்கு இடையேயான சர்வதேச கடல் எல்லை பிரச்சினை முடிவு பெறாத ஒன்றாக உள்ளது.

மீனவர்களை மீட்கவேண்டும்:-

இந்தியா-இலங்கை இடையே உருவான அந்த சட்டவிரோதமான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு, தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் மீட்கப்படவேண்டும் என்பதை தமிழக அரசு மீண்டும் மீண்டும் உறுதியாக கேட்டுக்கொள்கிறது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள 6 மீனவர்கள், ஒரு மீன்பிடி படகையும் சேர்த்து, மொத்தமுள்ள 21 தமிழக மீனவர்களையும் அவர்களின் 92 மீன்பிடி படகுகளையும் மீட்பதற்காக, நீங்கள் தனிப்பட்ட முறையில் இந்த பிரச்சினையில் தலையிட வேண்டும். மேலும் இதை இலங்கை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லவேண்டும் என்று வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடவேண்டும் என ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.