கடந்த சில நாட்களுக்கு முன்பாக வரும் மக்களவை தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்திருந்தார். அதற்க்கான வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணியில் சமத்துவ மக்கள் கட்சி ஈடுப்பட்டு வந்தது.
இந்தநிலையில், தமிழக துணை முதல்வர் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரை சந்தித்து பேசி உள்ளனர். அந்த சந்திப்பில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தரம்படி சரத்குமாரிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகின. இதுக்குறித்து தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார் சரத்குமார். ஆலோசனைக்கு பின்னர் அதிமுகவுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை ஒருமனதாக முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று வரும் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக கூறினார். மேலும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்வேன் எனவும் கூறினார்.