அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது கட்சி விதிகளின்படி செல்லாது, எனவே அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று எம்.பி., மைத்ரேயன் தலைமையில் டெல்லி சென்று தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்து இருந்தனர்.
இதையடுத்து சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு, பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இந்த நோட்டீசுக்கு அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடந்த வாரம் பதில் அளித்து இருந்தார். ஆனால் இந்த பதிலை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்துக்கு இன்று சசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தவாறு பதில் அளித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக பொதுச்செயலாளாராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.
முன்னதாக இதற்கு பதில் அளித்திருந்த டிடிவி தினகரன், கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராகத்தான் சசிகலா தேர்வு செய்யப்பட்டு இருந்தார் என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் சசிகலா கையெழுத்திட்ட 70 பக்கங்கள் கொண்ட பதில் கடிதத்தை அவரது வழக்கறிஞர்கள் ராஜேஷ்குமார் மற்றும் பரணிகுமார் ஆகியோர் தேர்தல் ஆணையத்திடம் இன்று ஒப்படைத்தனர். அதில் தன் மீது புகார் தெரிவித்திருப்பவர்கள்தான் தன்னை பொதுச்செயலாளராக முன்மொழிந்ததாக சசிகலா தெரிவித்துள்ளார்.