சவுக்கு சங்கருக்கான தண்டனை அதிகப்படியானது - வேதனைப்படும் சீமான்

பத்திரிகையாளர் சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறை தண்டனை அதிகப்படியானது என சீமான் தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 16, 2022, 02:17 PM IST
  • சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டிருக்கிறார்
  • அவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது
  • சங்கர் கைதுக்கு பலரும் கண்டனம்
 சவுக்கு சங்கருக்கான தண்டனை அதிகப்படியானது - வேதனைப்படும் சீமான் title=

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நீதித்துறை குறித்து விமர்சித்ததற்காக, வலையொளியாளர் தம்பி சவுக்கு சங்கர் அவர்களுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறுமாத காலம் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரின் கருத்துக்களில் பலவற்றில் முரண்பட்டாலும், அவரின் கருத்துரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றே கருதுகிறேன். ‘நீதிமன்றங்கள், மக்களுக்கானதாக இருக்க வேண்டும்’ என்கிற அவரது வாதம் ஏற்கப்படவேண்டிய ஒன்றுதான். மக்களின் கடைசி நம்பிக்கையாக இருக்கிற நீதிமன்றங்கள் எந்தத் தவறும் இழைத்துவிடக்கூடாது என்கிற நோக்கம் மிகச்சரியானது.
 அண்ணல் அம்பேத்கர் வகுத்த அரசியலமைப்புச்சட்டம், தனிநபருக்கான கருத்துரிமையையும், நீதிமன்றத்திற்கான பாதுகாப்பையும் சமமாக உறுதி செய்கிற நிலையில், தனிநபர் ஒருவரின் கருத்தால் நீதித்துறை முற்றாகக் களங்கப்படுகிறதென்பது ஏற்கக்கூடியதாக இல்லை.ஒரு எளிய மகன் அதிகார வர்க்கத்தை நோக்கிக் கேள்வியெழுப்புவதும், ஆட்சியாளர்களை விமர்சனத்துக்கு உட்படுத்துவதுமான கருத்துரிமையை உறுதிசெய்வதுதான் மக்களாட்சித் தத்துவத்தின் மகத்துவமாகும். 

உலகப்பொதுமறை தந்த தமிழ் மறையோன் வள்ளுவப்பெருமகனார் தனது குறட்பாவில், ‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்’ எனக்கூறி, எதிர்நின்று எவருமே கேள்வி கேட்க முடியாத பெரும் எதேச்சதிகாரப்போக்கால் கட்டமைக்கப்பட்ட முடியாட்சியிலேயே ஆளும் அரசனின் குறைகளையும், குற்றங்களையும் சுட்டிக்காட்ட வேண்டும்; இல்லாவிட்டால், அந்த ஆட்சியதிகாரம் வீழுமென்கிறார். மக்களால் தேர்வுசெய்யப்படாத மன்னராட்சியே விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டு, அதன் குற்றம், குறைகள் யாவும் அலசித் தீர்க்கப்பட வேண்டுமென்றால், மக்களாட்சியால் நிர்மாணிக்கப்பட்ட அரசாங்கக்கட்டமைப்பும், நால்வகைத்தூண்களான சட்டமன்றம், நிர்வாகம், நீதித்துறை, ஊடகங்கள் ஆகியவையும் விமர்சனத்திற்கு உட்பட்டுத்தானே ஆக வேண்டும். 

Shankar

அவற்றை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாகக் கட்டமைப்பது எந்தவகையில் நியாயம்? அந்த அடிப்படையில், சனநாயகத்தின் மிக முக்கிய அங்கங்களுள் ஒன்றான நீதித்துறையின் மீது எழுப்பப்பட்டக் கேள்விகளுக்காகத் தம்பி சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறைத்தண்டனை என்பது அதிகப்படியானது என்றே எண்ணுகிறேன். சவுக்கு சங்கரின் கருத்துகளில் தவறு இருப்பதாக நீதிமன்றம் கருதினால், அது தனக்குண்டான கட்டற்ற அதிகாரத்தை உணர்ந்து, கண்டனத்தோடும், எச்சரிக்கைசெய்தும்கூட இவ்வழக்கைக் கையாண்டிருக்கலாம். கடந்த காலங்களில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி அவர்கள், ‘தகுதியின் அடிப்படையில் நீதிபதிகள் வரவில்லை; அடுத்தவர் காலை பிடித்தே வந்திருக்கிறார்கள்’ என மிக இழிவாகவும், பல அரசியல் உள்காரணங்களோடும் கருத்துதிர்த்தபோது அவமதிப்புக்குள்ளாகாத நீதிபதிகளும், நீதித்துறையும், தம்பி சவுக்கு சங்கர் கூறிய கருத்துகளினால் எப்படி மாண்பிழந்து போவார்கள்? என்பதை அறிய முடியவில்லை!

மேலும் படிக்க | கலைஞரின் பேனாவால் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் - ஜெயக்குமார் கவலை

சனநாயகத்தில், இந்த இடத்தில் விமர்சனத்திற்கு உட்பட்டவர், இந்த இடத்தில் இருப்பவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்று எந்த வரையறையும் கிடையாது. இந்த நாட்டில் நீதிமன்றங்கள் இதுவரை பிழையே இழைத்ததில்லை என்று யாராவது கூறமுடியுமா? நீதிமன்றத்திற்கு நீதிமன்றம் நீதி மாறுபடும்போது, ஒரு நீதிபதியால் வழங்கப்படும் நீதி, மற்றொரு நீதிபதியால் மாற்றப்படும்போது, நீதித்துறை எப்படி விமர்சனத்திற்கு ஆளாகாமல் இருக்க முடியும்? இன்றைய நீதிபதிகள், வழக்கறிஞர்களாக இருந்த கடந்த காலங்களில், ‘நீதிபதிகள் ஒன்றும் கடவுள்கள் அல்லர்’ என்று விமர்சித்த வரலாற்றை மறுக்க முடியுமா? நீதிதவறினால் உடனே உயிரை மாய்த்துக்கொள்ள இன்றைக்கு நீதித்துறையில் உள்ளவர்கள் அனைவரும் நீதி வழுவா பாண்டிய நெடுஞ்செழியர்களா? அல்லது மகன் மீது தேரேற்றி மாட்டுக்கு நீதி சொன்ன மனுநீதிச்சோழர்களா? என்கின்ற கேள்வி மக்கள் மனதில் எழுகிறது.

ஆகவே, தம்பி சவுக்கு சங்கரின் அடிப்படையான நோக்கத்தையும், தனி நபர் சனநாயக உரிமையைக் கருத்தில கொண்டும் அவருக்கு வழங்கப்பட்ட ஆறுமாத சிறைத்தண்டனையை, மாண்புமிகு உயர்நீதிமன்றம் மறுபரிசீலனை செய்து அவரை விடுவிக்க வேண்டுமெனக் கோருகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News