மருத்துவ மேற்படிப்பில் நடைமுறையில் இருந்த 50 சதவீத இட ஒதுக்கீடு தொடர வேண்டும் என்றும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் நடைபெற்றுவரும் மருத்துவர்களின் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேற்று (23/04/2017) காலை 11 மணியளவில் பங்கேற்றார்.
இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி போராடும் மாணவர்களுக்கும், அரசு மருத்துவர்களுக்கும் நாம் தமிழர் கட்சி துணை நிற்கும் என்றும், மாநில இடஒதுக்கீட்டினைத் திரும்பக் கொண்டு வர தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET – National Eligiblity Entrance Test) இந்தியா முழுக்க கொண்டு வரும் பணியினை முடுக்கிவிட்டிருக்கிறது மத்தியில் ஆளும் மோடி அரசு. ஏழை, பணக்காரர் என்ற வர்க்க வேறுபாடுகளாலும், கிராமப்புறம், நகர்ப்புறம் என வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவதில் இருக்கிற மாறுபாடுகளாலும் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வைக் கொண்டிருக்கிற இந்நாட்டில் இந்தியா முழுக்க ஒரே மாதிரியான தேர்வு முறையைத் திணிக்க முற்படும் இச்செயலானது சமூக நீதிக்கும், சமத்துவப் பேணலுக்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்குமே எதிரான ஒன்றாகும்.
60 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் முதல் தலைமுறைப் பட்டதாரிகளே இப்போதுதான் கல்வி கற்கச் செல்லும் நிலையில் இது அவர்கள் மருத்துவராகும் கனவுகளையும், வாய்ப்புகளையும் அடியோடு மறுக்கும் படுபாதகச் செயலாகும். மருத்துவத்துறையில் சேருவதற்கானத் தகுதியாக ஏற்கனவே 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வைக்கப்பட்டிருக்கிற நிலையில் இப்போது கொண்டு வரப்படும் நீட் தேர்வுமுறையானது தேவையற்றது மட்டுமல்லாமல், மாணவர்களுக்கு கூடுதல் சுமையை அளித்து கிராமப்புற மாணவர்களையும், ஏழை மாணவர்களையும் மருத்துவத்துறையில் இருந்து முற்றுமுழுதாக அப்புறப்படுத்தும் சதியின் செயலாக்கமாகும். மேலும், இத்தேர்வு முறை மூலம் தனியார் பயிற்சி நிலையங்கள் மாணவர்களிடம் மிகப்பெரிய கட்டணக்கொள்ளையில் ஈடுபடும் பேராபத்து மறைந்திருக்கிறது. இதன்மூலம், மருத்துவம் என்பதனை சேவைக்கண் கொண்டு பார்க்கிற உளவியலை அடியோடு அழித்து, அதனை மற்றொரு வணிகமாக்கி சந்தைப்படுத்துகிற உலகமயமாக்கலின் கோர வடிவத்திற்கு செயல்வடிவம் கொடுக்கப்படுகிறது என்பதையே நமக்கு உணர்த்துகிறது.
கல்வி நிலையங்களில் சீருடையில்கூட வேறுபாட்டை உணரக்கூடாது என்று சிந்தித்து செயலாற்றிய பெருந்தலைவர் காமராசர் உலவிய இத்திருநாட்டில் புகுத்தப்படும் இத்தேர்வு முறையானது ஏழை, நடுத்தர, கிராமப்புற, மலைவாழ் மாணவர்களை பாகுபடுத்தி, வடிகட்டி மருத்துவத்துறையிலிருந்து வெளியேற்றுவதற்கான வேலைத்திட்டமாகும். இத்தகைய நீட் தேர்வு முறையிலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கக்கோரும் தீர்மானமானது தமிழக அரசால் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 75 நாட்களுக்கு மேலாகியும் இன்றுவரை அதற்குக் குடியரசுத்தலைவரின் ஒப்புதல் கிடைக்கப்பெறவில்லை. ஒப்புதல் அளிக்காது காலம்தாழ்த்தப்படும் பட்சத்தில் வரும் மே 7ஆம் தேதி நடத்தப்படும் நீட் தேர்வில் தமிழக மாணவர்களும் பங்கேற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். இதன்மூலம், தமிழக மாணவர்கள் மருத்துவத்துறையில் தேர்ச்சிபெற முடியாநிலையை எய்து, மருத்துவத்துறையில் தமிழக மாணவர்களே இல்லை என்ற நிலை உருவாகும். எனவே, தமிழக மாணவர்களின் நலனையும், மருத்துவத்துறையில் தமிழகத்தின் எதிர்காலத்தையும் கவனத்திற்கொண்டு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரும் தீர்மானத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றத் தர வேண்டிய நடவடிக்கைகளை தமிழக அரசானது உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 50 சதவீத மாநில இடங்கள் (SERVICE QUOTA) மருத்துவப் பட்டப்படிப்பு முடித்து 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய மருத்துவர்களுக்கே ஒதுக்கப்பட்டு வந்தது. இதன்மூலம் கிராமப்புற மக்களும், மலைவாழ் மக்களும் மருத்துவச் சேவைகளைப் பெற்று வந்தனர். தமிழகமும் சுகாதாரத்தில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்ந்தது. தற்போது அதற்கு வேட்டுவைக்கும் விதமாக, மாநில இட ஒதுக்கீட்டுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் அதனை ரத்து செய்து கடந்த 17ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இத்தீர்ப்பானது, ஊரகப் பகுதிகளில் மருத்துவப் பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களிடம் மிகப்பெரிய சோர்வை ஏற்படுத்தி, அவர்கள் அந்தப் பணியிலிருந்து விலகுவதற்கு வழிகோலுகிறது. இதன்மூலம், கிராமப்புற மக்களின் நல்வாழ்க்கையும், சுகாதாரமும் மிகப்பெரிய அளவில் கேள்விக்குள்ளாக்கப்படும். இதன்விளைவாக, தனியார் மருத்துவமனைகளையே சார்ந்திருக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு கிராமப்புற மக்கள் தள்ளப்பட்டு, மருத்துவத்தை வணிகமாக்கும் யுக்திக்கு பலிகடாவாக்கப்படுவார்கள். இதனையுணர்ந்து, 17 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டு முறையினை மீண்டும் தொடர்வதற்கு அவசரச் சட்டம் பிறப்பிக்க மாநில அரசு முன்வர வேண்டும். இத்தோடு, நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக்கோரி விரைவான முன்னெடுப்புகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன் என அந்த அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.