ஆளுநரின் அரசியல் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது - சொன்னவர் செல்லூர் ராஜூ!

AIADMK Sellur Raju: ஆளுநர் ஒரு மாநில கட்சியில் பிரதிநிதியாக வெளிக்காட்டுகின்ற அளவில் பேசுகிறார் என்றும் அவரின் அரசியல் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 8, 2023, 04:37 PM IST
  • ஆளுநராக பேசுகிறாரா அல்லது அறிக்கை வருகிறதா என்பது எனக்கு தெரியவில்லைஸ - செல்லூர் ராஜூ
  • திமுக ஆட்சி மக்களால் வெறுக்கப்படுகின்ற ஆட்சியாக தான் இருக்கிறது - செல்லூர் ராஜூ
  • திராவிட இயக்கத்திற்கு தூணாக இருந்தது மதுரை மாவட்டம் - செல்லூர் ராஜூ

Trending Photos

ஆளுநரின் அரசியல் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது - சொன்னவர் செல்லூர் ராஜூ! title=

AIADMK Sellur Raju: கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி, கூடிய அதிமுக செயற்குழுவில் நிறைவேற்றபட்ட தீர்மனத்தின்படி, மதுரையில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி மாபெரும் மாநில மாநாடு நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். 

அதன் அடிப்படையில் கடந்த மாதம் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே. பி முனுசாமி, தலைமை நிலைய செயலாளர் எஸ். பி வேலுமணி, அமைப்புச் செயலாளர் தங்கமணி மற்றும் மதுரை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மாநாடு நடைபெறும் இடத்தை இன்று நேரில் சென்று ஆய்வு செய்து தேர்வு செய்தனர்.

அதன்படி மதுரை விமான நிலையம் அருகில் உள்ள வலையங்குளம்  பகுதியில் மாநாடு நடைபெறுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு நில உரிமையாளரிடம் ஒப்பந்தம் போடப்பட்டது. மாநாடு நடைபெறும் இடத்தில் பொக்லைன் எந்திரம் கொண்டு சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. 

இதனை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, மேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் செல்வம், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப செயலாளர் விவி ராஜ் சத்யன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அண்ணாதுரை, தமிழரசன், எஸ்எஸ் சரவணன் உள்ளிட்ட மதுரை மாவட்ட நிர்வாகிகளான வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், கொரியர் கணேசன் , பொன் ராஜேந்திரன் , எம் எஸ் பாண்டியன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

மேலும் படிக்க | மின் கட்டணம் உயர்வு, ஆனால்... மின்சார வாரியம் விளக்கம்!

அண்ணாவுக்கு அடுத்து...

மாநாடு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா அதிமுக தலைமை உத்தரவின் பெயரில் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார்.

மேலும் அன்று பேரறிஞர் அண்ணா மதுரை திருப்பரங்குன்றத்தில் மாநாடு நடத்தியது போல தற்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின்உத்தரவின் படி அதே திருப்பரங்குன்றம் தொகுதியில் நடைபெறும் அதிமுக மாநாடு இந்திய துணை கண்டமே வியக்கும் அளவில் நடைபெறும் என தெரிவித்தார். இந்த வரலாற்று சிறப்பு மிக்க மாநாட்டில் சுமார் 50 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

நன்றி விசுவாசம் தமிழனுக்கு மட்டும் உள்ளது

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, "அதிமுக தொண்டர்கள் மட்டுமல்ல குடும்பம் குடும்பமாக மாநாட்டில் பங்கு பெற இருக்கிறார்கள். மாநாட்டில் தங்கு தடையின்றி பங்குபெற்று ரசித்து விட்டு செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

மேலும் திராவிட இயக்கத்திற்கு தூணாக இருந்தது மதுரை மாவட்டம். அண்ணா காலம் முதல் ஜெயலலிதா வரை உண்மையான தொண்டர்கள் இருக்கக்கூடிய இயக்கம் அதிமுக தான். மாநாடு நடைபெறும் இந்த இடத்தின் உரிமையாளர்கள் தாமாக முன்வந்து எங்களுக்கு என்னென்ன உதவி வேண்டுமோ அந்த உதவிகளை செய்கிறார்கள் இந்த நன்றி விசுவாசம் தமிழனுக்கு மட்டுமே உள்ளது. இந்த மாநாட்டிற்கான அனைத்து பணிகளையும் அவர்கள் தாமாக முன்வந்து செய்து வருகிறார்கள்.

பார் போற்றும் மாநாடு

தமிழகம் முழுவதுமே இந்த அதிமுகவின் மாநாட்டை பற்றி தான் பேசி வருகிறார்கள். எடப்பாடி தலைமையில் நடைபெறும் இந்த மாநாடு உலகமே வியந்து பார்க்கும் அளவில் ஒரு பார் போற்றும் மாநாடாக அமையும். நாங்கள் மூன்று பேரும் வெவ்வேறு உருவங்கள் தான். ஆனால் எண்ணங்கள் ஒன்று தான். வருகின்ற 2024ஆம் ஆண்டு தேர்தலுக்கு ஒரு வெற்றிப்படியாக இந்த மாநாடு அமையும். தமிழ்நாட்டில் ஆட்சி கட்டிலை மாற்றக்கூடிய மாநாடாக அமையும். 

தமிழகத்தின் சட்ட ஒழுங்கு கேலிக்கூத்தாக உள்ளது. தமிழ்நாட்டின் ஆளுங்கட்சி துணையோடு தான் கள்ளச்சாராயம், கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது இரண்டு மாவட்டத்தில் 25 பேர் இறந்திருப்பது மிகப்பெரிய வேதனை. 

டாஸ்மாக்கில் கள்ளச்சாரயம்?

கேவலம் திராவிட மாடல் என்றால் கஞ்சா போதை பொருள் விற்பனை மாடல்தான். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக காவல்துறை டிஐஜி சைலேந்திர பாபுவை சுதந்திரமாக செயல்பட விட்டால், தமிழகம் முழுவதும் மூளை முடுக்கு எங்கும் கஞ்சா போதை பொருட்கள், கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறாது. ஆனால், முதல்வருக்கு நன்கு தெரியும், திமுகவினர் கஞ்சா போதை பொருள் விற்று தான் சம்பாதிக்கிறார்கள் என்பது. டாஸ்மாக்கில் கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது. இந்த ஆட்சி மக்களால் வெறுக்கப்படுகின்ற ஆட்சியாக தான் இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வரும்போது எல்லாம் மக்களுக்கு விரோதமான ஆட்சியாக தான் இருந்துள்ளது" என்றார்.

ஆளுநர் இல்லாமல் ஓர் அணுவும் அசையாது

தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என். ரவி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த செல்லூர் ராஜூ,"இரண்டு பக்கமும் தவறு உள்ளது. ஆளுநர் ஒரு மாநில கட்சியில் பிரதிநிதியாக வெளிக்காட்டுகின்ற அளவில் பேசுகிறார். அவர் பேசுகிறாரா அல்லது அறிக்கை வருகிறதா என்பது எனக்கு தெரியவில்லை. அரசியல் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆளுங்கட்சி ஆளுநரை விமர்சனம் செய்வதையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆளுநர் என்பவர் ஆளும் கட்சியின் தலைமை தாங்க கூடியவர். அவர் இல்லாமல் ஓர் அணுவும் அசையாது. அவர் அனுமதி உடன்தான் எந்த திட்டமும் செயல்படுத்த முடியும். இவர்கள் மோதலினால் தமிழக மக்களின் நல்வாழ்வு தான் பாதிக்கப்படுகிறது. நல்ல திட்டங்களை கிடப்பில் போடுகின்ற வாய்ப்பு ஏற்படுகிறது. இது போன்ற செயலினால் கட்சிக்கும் நல்லதல்ல, நாட்டு மக்களுக்கும் நல்லதல்ல. 

'தமிழ்நாடு உரிமைகளை காத்தவர்கள் நாங்கள்'

ஜெயலலிதா கருத்துக்கள் மாறுபட்டு இருந்தாலும் தமிழக மக்களுக்கு நல்லது என்றால் அதனை வரவேற்பார்கள். தன்னலமின்றி தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக விட்டுக் கொடுத்து சென்றவர்கள் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும். எப்போதெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது என்றால் ஆதரவளிப்பதும் தமிழ்நாட்டுக்கு விரோதமாக மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தால் அதனை எதிர்க்கவும் செய்துள்ளார். காவேரி பிரச்சனையில் 48 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கிய வரலாறும் அதிமுகவுக்கு உள்ளது. எங்கள் ஆட்சியில் தான் தமிழ்நாட்டின் உரிமைகளை காப்பாற்றி இருக்கிறோம்" என்றார். 

மேலும் படிக்க | சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி மீது இளம் ஐஏஎஸ் அதிகாரி பரபரப்பு புகார்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News